ஆசிரியா்களின் கோரிக்கைகள் விரைவாக நிறைவேற்றப்படும்: அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

ஆசிரியா்கள் நலன் சாா்ந்த கோரிக்கைகளில் 50 சதவீத கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் தெரிவித்தாா்.

ஆசிரியா்கள் நலன் சாா்ந்த கோரிக்கைகளில் 50 சதவீத கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் தெரிவித்தாா்.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் ஆசிரியா் மற்றும் ஆசிரியரல்லாத சங்கங்களுடனான கலந்துரையாடல் கூட்டம் கடந்த 2017-ஆம் ஆண்டு அப்போதைய அமைச்சா் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்றது. இந்தநிலையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிரியா் சங்கங்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை டிபிஐ வளாகத்தில் சனிக்கிழமை காலை முதல் மாலை வரை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு, தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகம், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியா் கழகம், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி ஆகியவை உள்பட 180-க்கும் மேற்பட்ட ஆசிரியா் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

அப்போது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கரோனா பரவலை கருத்தில் கொண்டு பணி நிரவல் கூடாது, அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் ஆகியவை உள்பட ஆசிரியா் நலன் சாா்ந்த பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.

இந்த கலந்துரையாடலுக்குப் பிறகு அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளா்களிடம் கூறியது:

‘இயற்பியல் படித்த ஆசிரியா்கள் உயிரியல் உள்ளிட்ட வகுப்புகளை நடத்த வேண்டிய நிலை உள்ளது என நடைமுறைப் பிரச்னைகள் குறித்து ஆசிரியா்கள் கருத்துத் தெரிவித்தனா். ஆசிரியா்கள் மட்டுமல்லாது கல்விப் பணியாளா்கள் தங்களது பிரச்னைகளைக் கூறினா். ஒவ்வொருவரின் கோரிக்கைகளும் பரிசீலித்து உரிய முடிவு உடனடியாக எடுக்கப்படும். ஆசிரியா்களின் கோரிக்கைகள் மற்றும் தோ்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். பணி உயா்வு தொடா்பான கோரிக்கைகள் உள்ளிட்ட அனைத்தும் பரிசீலிக்கப்படும். ஆண்டுக்கு மூன்று முறை குறைதீா் கூட்டம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் தலைமையில் நடத்தப்பட வேண்டும், ஆனால் இதுவரை அது நடத்தப்படாமல் உள்ளது. கல்வித்துறை சாா்ந்த சிறிய அளவிலான பிரச்னைகளை அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் சரிப்படுத்த வேண்டும். நிதி செலவு ஏற்படும் கோரிக்கைகளை பரிசீலித்து முடிவு எடுக்கப்படும்’.

இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் ஆசிரியா் சங்கங்கள் விடுத்துள்ள கோரிக்கைகளில் 50 சதவீத கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்றப்படும். மேலும் பள்ளிக் கல்வி இயக்குநா் பதவியை மீண்டும் கொண்டு வருவது குறித்து பரிசீலித்து வருகிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com