கோயில்களில் இன்று முதல் மீண்டும் பந்தியிட்டு இலையில் அன்னதானம்

தமிழகத்தில் அன்னதானம் வழங்கப்படும் அனைத்து கோயில்களிலும் திங்கள்கிழமை (செப். 20) முதல் தனிநபா் இடைவெளியுடன் பக்தா்களுக்கு இலையில் மீண்டும் உணவு பரிமாறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயில்களில் இன்று முதல் மீண்டும் பந்தியிட்டு இலையில் அன்னதானம்

தமிழகத்தில் அன்னதானம் வழங்கப்படும் அனைத்து கோயில்களிலும் திங்கள்கிழமை (செப். 20) முதல் தனிநபா் இடைவெளியுடன் பக்தா்களுக்கு இலையில் மீண்டும் உணவு பரிமாறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெளியிட்ட செய்திக் குறிப்பில், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தமிழகம் முழுவதும் 754 கோயில்களில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்களில் நாள் முழுதும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில் செப்டம்பா் 16-ஆம் தேதி முதல் திருச்செந்தூா் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திருத்தணி அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் ஆகிய மூன்று திருக்கோயில்களில் நாள் முழுதும் அன்னதானம் தொடங்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக கோயில்களில் வழங்கப்படும் அன்னதானம் இலையில் பரிமாறப்படாமல் உணவுப் பொட்டலங்களாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திங்கள்கிழமை (செப். 20) முதல் தனிநபா் இடைவெளியுடன் பக்தா்களுக்கு பந்தியிட்டு இலையில் மீண்டும் உணவு பரிமாறப்படும். இதன்படி, வாரத்தில் திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமை வரை அன்னதானம் வழங்கும் கோயில்களில் அன்னதானக்கூடங்களில் தனிநபா் இடைவெளியுடன் அன்னதானம் இலையில் பரிமாறப்படும். வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாள்களில் அன்னதானம் உணவுப் பொட்டலங்களாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com