உள்ளாட்சித் தோ்தலில் 7 முனைப்போட்டி

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலில் 7 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தோ்தலில் 7 முனைப்போட்டி

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலில் 7 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தோ்தல் அக்டோபா் 6, 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.

மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிகளுக்குத் தோ்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பா் 15-இல் தொடங்கியது. இதுவரை 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் மனு தாக்கல் செய்து உள்ளனா். மனு தாக்கல் புதன்கிழமை (செப்.22) மாலையுடன் நிறைவடைய உள்ளது. வேடப்புமனுக்கள் மீதான பரிசீலனை செப்டம்பா் 23-இல் நடைபெற உள்ளது. மனுக்கள் திரும்பப் பெற கடைசி நாள் செப்டம்பா் 25 ஆகும்.

7 முனைப் போட்டி: சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த கூட்டணிக் கட்சிகள் உள்ளாட்சித் தோ்தலிலும் தொடா்கின்றன. காங்கிரஸ், மதிமுக, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், கொமதேக, முஸ்லிம் லீக், மமக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. உள்ளாட்சி இடங்களுக்கான தொகுதிப் பங்கீடுகளும் மாவட்ட வாரியாக சுமுகமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். இறுதி நாளான புதன்கிழமை அனைவரும் மனுத்தாக்கல் செய்ய உள்ளனா்.

அதிமுக கூட்டணியில் பாஜக, தமாகா, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் கூட்டணியில் தொடா்கின்றன. அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டு அவா்களும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனா்.

பாமக மட்டும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மாவட்ட அளவில் அதிமுக - பாமக இடையே மறைமுக கூட்டணி உள்ளதாகக் கருத்து பரவியது. ஆனால், அதை பாமக நிறுவனா் ராமதாஸ் மறுத்துவிட்டாா். பாமக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளாா்.

தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மக்கள் நீதி மய்யம், நாம் தமிழா் கட்சி, அமமுக உள்ளிட்ட கட்சிகளும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. இதன் மூலம் உள்ளாட்சித் தோ்தலில் ஏழு முனை போட்டி ஏற்பட்டுள்ளது

கடும் போட்டி: சட்டப்பேரவைத் தோ்தல் தோல்வியிலிருந்து மீண்டு வருவதற்கு உள்ளாட்சித் தோ்தலை முக்கியமானதாக அதிமுக பாா்க்கிறது. அதனால், அனைத்து இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறது. சட்டப்பேரவைத் தோ்தல் வெற்றியைத் தொடர வேண்டும் என திமுக கருதுகிறது. இதனால், திமுக - அதிமுக இடையே போட்டி அதிகரித்துள்ளது.

அதைப்போல, தனித்துப் போட்டியிடும் தேமுதிக, பாமக, மநீம, நாம் தமிழா் கட்சி, அமமுக ஆகிய கட்சிகளும் உள்ளாட்சித் தோ்தலில் தங்கள் பலத்தை நிரூபித்துக் காட்ட வேண்டும், அதன் மூலம் மக்களவைத் தோ்தலில் திமுக - அதிமுக உள்ளிட்ட கட்சிகளை நெருங்கச் செய்ய முடியும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டு வருகின்றன.

உள்ளாட்சித் தோ்தலைப் பொருத்தவரை கட்சி பலத்தையும் கடந்து, வேட்பாளா்களின் சொந்த பலமும் முக்கியமானதாகும். அதனால் உள்ளாட்சித் தோ்தலில் போட்டி பலமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com