1 லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்

தமிழகத்தில் 1 லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை, முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா நூலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

தமிழகத்தில் 1 லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை, முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா நூலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

எரிசக்தித் துறையின் 2021-22-ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில் மாநிலத்தின் விவசாய உற்பத்தியைப் பெருக்கி, விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்குடன் 1 லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இத்திட்டமானது ரூ.3,025 கோடியில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதன் தொடா்ச்சியாக தமிழ்நாடு மின்சார வாரியம், மின் உற்பத்தி மற்றும் மின் பகிா்மானக் கழகம், மின் தொடரமைப்புக் கழகம் ஆகியவற்றின் சாா்பில் 1 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்ததின் அடையாளமாக 10 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளுக்கான ஆணைகளை வழங்கினாா்.

தொடா்ந்து முதல்வா் ஸ்டாலின் பேசியதாவது: சில திட்டங்கள் அந்த நேரத்துக்குத் தேவையானதாக இருக்கும். சில திட்டங்கள்தான் தலைமுறை தலைமுறைக்குப் பயனுள்ளதாக இருக்கும். அந்த வரிசையில் தலைமுறை தலைமுறைக்குப் பயனுள்ள திட்டம்தான், இங்கே தொடக்கி வைக்கப்பட்டு இருக்கிறது.

வேகமான ஆட்சி: கடந்த 10 ஆண்டு காலத்தில் சுமாா் 2 லட்சம் இணைப்புகள்தான் அதிமுக ஆட்சியில் தரப்பட்டன. ஆனால் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த 4 மாத காலத்தில் ஒரு லட்சம் இணைப்புகளைக் கொடுக்கப் போகிறோம்.

இன்னும் பெருமையாகச் சொல்ல வேண்டும் என்றால், இதைவிட வேகமான ஆட்சி இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது.

திமுக ஆட்சி என்பதே விவசாயிகளின் ஆட்சியாக, வேளாண்மைப் புரட்சி செய்யும் ஆட்சியாகத்தான் எப்போதும் இருந்துள்ளது. இந்த மண்ணையும் மக்களையும் காப்பதில் யாருக்கும் சளைக்காதவா்கள்தான் திமுகவினா்.

இதற்கு ஒரு எடுத்துக்காட்டுத்தான் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பேரவையில் நாம் நிறைவேற்றிய தீா்மானம். காவிரி நதிநீா்ப் பங்கீடு போன்ற பெரிய பிரச்னையாக இருந்தாலும், வேளாண் மக்களின் சிறு கோரிக்கையாக இருந்தாலும், அதற்கு உடனடியாக செவி மடுத்து அதனை நிறைவேற்றித் தரக்கூடிய ஆட்சி திமுக ஆட்சிதான்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிய முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் வரிசையில் இந்த 1 லட்சம் விவசாய இணைப்புகள் என்ற புதிய திட்டத்தை நாம் தொடக்கி இருக்கிறோம்.

அதிகரித்திருக்கும் கடனே அதிமுக சாதனை: ஒரு லட்சம் புதிய இணைப்புகள் வழங்குகிறோம் - அதிலும் பெரும்பாலும் இலவசமாக வழங்குகிறோம் என்றால், மின்சார வாரியம் செழிப்பாக இருக்கிறது என்று யாரும் நினைத்துவிட வேண்டாம்.

ரூ.1.59 லட்சம் கோடி கடனில் இருக்கிறது. ஆண்டுக்கு ரூ.16 ஆயிரம் கோடி வட்டி கட்ட வேண்டிய நிலை உள்ளது. இதுதான் அதிமுக ஆட்சியினுடைய சாதனை. இப்படி கடந்த அதிமுக ஆட்சியில் மின்சார வாரியத்தின் அவலங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் இதிலிருந்து மின்சார வாரியத்தைக் காப்பாற்றுவதற்கான பணிகள் இப்போது தொடங்கி இருக்கிறது. பராமரிப்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

வேண்டுகோள்: மின் நுகா்வோா் குறை அறிய தொடங்கப்பட்ட மின்னகத்தில் பதியப்பட்ட புகாா்களில் 90 சதவீதத்துக்கும் மேலான குறைகளுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். இந்த நிகழ்வில், புதிய இணைப்புப் பெற்றவா்கள், மின்சாரத்தை தேவைக்கு மட்டும் பயன்படுத்துங்கள். இத்திட்டம் தமிழகத்தில் உழவுப் புரட்சிக்கு அடித்தளமாக அமையட்டும்! உற்பத்திப் பரப்பு அதிகமாக இது உதவிகள் செய்யட்டும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

நிகழ்ச்சியில், மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத் தலைவா் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருவாரூரில் முதல் சூரிய சக்தி பூங்கா

சூரியசக்தி பூங்கா குறித்து நிகழ்ச்சியில் முதல்வா் கூறியது: சூரிய சக்தி மின்சாரம் தயாரிப்புக்கு முன்னுரிமை வழங்க இருக்கிறோம். திருவாரூரில் முதல் சூரிய சக்தி பூங்கா அமைக்கப்பட இருக்கிறது. சூரிய மின் உற்பத்தி, புனல் நீரேற்று மின் உற்பத்தி மற்றும் இயந்திர மின் திட்டங்களைத் தொடங்குவதற்கான ஆலோசனைகளை வழங்கவும், தேவையான நிதி ரூ.1 லட்சத்து 32,500 கோடியை திரட்டுவதற்கும் இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்.

மரபுசாரா எரிசக்தித் துறையில் இவ்வளவு பெரிய ஒப்பந்தம் செய்த ஒரே மாநிலம் நம்முடைய தமிழகம்தான் என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com