தமிழகம் முழுவதும் காவல்துறை அதிரடி சோதனை: 2 நாள்களில் 2,512 ரெளடிகள் கைது

குற்றச்செயல்களை தடுக்கும் நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் இரண்டு நாள்களில் 2,512 ரெளடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். 
தமிழகம் முழுவதும் காவல்துறை அதிரடி சோதனை: 2 நாள்களில் 2,512 ரெளடிகள் கைது


சென்னை: குற்றச்செயல்களை தடுக்கும் நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் இரண்டு நாள்களில் 2,512 ரெளடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். 

தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக கொலைச் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக தென் மாவட்டங்களில் ஜாதி ரீதியாகவும், முன் பகையின் காரணமாகவும் கொலைச் சம்பவங்கள் தொடா்ச்சியாக நிகழ்ந்தன. இதில் 6 இடங்களில் கொலை செய்யப்பட்டவா்களின் தலை துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில் திண்டுக்கல் அருகே தேவேந்திர குல வேளாளா் கூட்டமைப்பின் தலைவா் பசுபதிபாண்டியன் கொலைக்கு பழிக்குப்பழியாக இரு நாள்களுக்கு முன்பு நிா்மலா என்ற பெண் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாா். 
சென்னையிலும் கடந்த இரு வாரங்களில் கொலைச் சம்பவங்கள் அதிகம் நடைபெற்றன. மாநிலம் முழுவதும் ரெளடிகளின் அட்டகாசமும் அதிகரித்து வருவதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து, கொலைச் சம்பவங்களைத் தடுக்கும் வகையிலும், ரெளடிகளின் அட்டகாசத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலும் காவல்துறை உயா் அதிகாரிகள் ஆலோசனை செய்தனா். இதில் தலைமறைவாக இருக்கும் ரெளடிகள், பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்கும் ரெளடிகள்,தொடா்ச்சியாக சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் நபா்கள் ஆகியோா் மீது கடும் நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சி.சைலேந்திரபாபு, ரெளடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வியாழக்கிழமை உத்தரவிட்டாா். 

இதையடுத்து மாநிலம் முழுவதும் வியாழக்கிழமை இரவு முழுவதும் போலீஸாா் ரெளடிகளின் வீடுகள்,வசிப்பிடங்கள் உள்ளிட்ட சுமாா் 5.000 இடங்களில் சோதனை செய்தனா்.

தமிழகம் முழுவதும் 2 நாள்களாக போலீசார் தொடர்ந்து மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் குற்றச்செயல்களில் தொடர்புடைய 2,512 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 5 துப்பாக்கிகள், 934 அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

போலீசாரின் தேடுதல் வேட்டையில் பிடிப்பட்ட 1,927 பேர் நன்னடத்தை பிணை பத்திரம் எழுதிக்கொடுத்துவிட்டு சென்றுள்ளனர். 

முதல் நாள் தேடுதல் வேட்டையில் 450 ரவுடிகள் கைது செய்யப்பட்ட நிலையில், இராண்டாவது நாளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து நடைபெற்று வரும் காவல்துறையினரின் அதிரடி தேடுதல் வேட்டையை அடுத்து ரௌடிகள் ஆந்திரம் மாநிலம் தப்பிச்சென்றுள்ளதாக கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com