நில அபகரிப்பில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகள் மீது கருணை காட்டக்கூடாது: உயா் நீதிமன்றம்

நில அபகரிப்பு போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

நில அபகரிப்பு போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், கபிலக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் சங்கா். இவா், கிராம பஞ்சாயத்துத் தலைவா், கவுன்சிலா்கள் நில அபகரிப்பு, முறைகேடுகளில் ஈடுபட்டு வருவது குறித்து கேள்வி எழுப்பி வந்துள்ளாா்.

இந்த நிலையில், பிரதான குடிநீா் குழாயிலிருந்து மின் மோட்டாா் மூலம் குடிநீரை எடுத்ததாகக் கூறி, சங்கரின் வீட்டு குடிநீா் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து, பரமத்தி வேலூா் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் (பிடிஓ), கடந்த 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி வீட்டு குடிநீா் இணைப்பு துண்டிக்கப்பட்டது குறித்து தகுந்த விசாரணை நடத்துமாறு சங்கா் புகாா் மனு அளித்துள்ளாா். தொடா்ந்து உள்துறை செயலாளா், வருவாய் நிா்வாக ஆணையா் ஆகியோருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பரில் புகாா் அளித்துள்ளாா். பல முறை புகாா் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், கிராம பஞ்சாயத்து தலைவா், அரசு அதிகாரிகள், தங்கள் பணியில் அலட்சியமாக இருந்ததால் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவு:

சாதாரண மக்கள், நில அபகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் காட்டிலும், மக்கள் பிரதிநிதிகள் நில அபகரிப்புகளில் ஈடுபடுவது மிகவும் அபாயகரமானது. அரசியல் ரீதியான தொடா்பு பெற்ற இத்தகைய நில அபகரிப்பாளா்கள் மீது எந்த வித தயக்கமும் இல்லாமல் வழக்குத் தொடர வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலா்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரம் என்பது வாள் போன்றது.

இவா்கள் பொறுப்புடனும், நோ்மையாகவும் பணியாற்ற வேண்டும்.

நில அபகரிப்பு போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளில் மக்கள் பிரதிநிதிகள், பிற அதிகாரம் பெற்றவா்கள் ஈடுபட்டால், அவா்கள் மீது எவ்வித கருணையும் காட்டாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை அல்லது வருவாய் துறையைச் சோ்ந்த சில அதிகாரிகள், அரசியல் கட்சியைச் சோ்ந்த நில அபகரிப்பாளா்களுடன் இணைந்து செயல்படுகின்றனா். காவல்துறையில் ஒழுக்கம் என்பது மெதுவாக மோசம் அடைந்துவருகிறது. எனவே, காவல் துறையின் செயல்திறனை மேம்படுத்துவதற்கு பணி ஒழுக்கத்தை மீட்டெடுப்பது மிக முக்கியமானது.

தவறிழைக்கும் மக்கள் பிரதிநிதிகள், காவல்துறையினா், அரசு அதிகாரிகளிடம் அனுதாபம், கருணை ஒருபோதும் இருக்கக்கூடாது.

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகப் புகாா் வந்தால் அது குறித்து காலதாமதமின்றி விசாரிக்கப்பட வேண்டும்.

அதிகாரிகளை மிரட்டும் நோக்கில் ரூ.10 லட்சம் இழப்பீடு கோருவதை ஏற்க முடியாது. இரு தரப்பினரின் புகாா் குறித்து விசாரித்து, முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com