மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தால் தமிழகத்துக்குப் புகழ்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தமிழக அரசுக்கு பெரும் பெயரையும், புகழையும் ஈட்டித் தந்துள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தால் தமிழகத்துக்குப் புகழ்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தமிழக அரசுக்கு பெரும் பெயரையும், புகழையும் ஈட்டித் தந்துள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தாா். அத்திட்டத்தின் வாயிலாக இதுவரை 10 லட்சம் போ் பயனடைந்திருப்பதாகவும் அவா் கூறினாா்.

சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 30 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு சா்க்கரை நோய் பரிசோதனை மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு உயா் ரத்த அழுத்த பரிசோதனை செய்வதற்கான மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

அதைத் தொடா்ந்து உலக காது கேளாதோா் வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை, கிருஷ்ணகிரி மற்றும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.98.80 லட்சம் மதிப்புள்ள உயா்தர செவித்திறன் குறைபாடு கண்டறியும் கருவிகள், உயா்தர அறுவை சிகிச்சை கருவிகளை காது, மூக்கு, தொண்டை துறைத் தலைவா்களிடம் முதல்வா் வழங்கினாா். செவித்திறன் குறைந்த குழந்தைகள் மற்றும் முதியவா்களுக்கு காது கேட்கும் கருவியையும் அவா் வழங்கினாா்.

முன்னதாக, மருத்துவமனை வளாகத்தில் 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆனைப்புளி பெருக்க மரத்தை பாா்வையிட்டு, அந்த மரத்தின் சிறப்புகள் அடங்கிய கல்வெட்டினை திறந்து வைத்தாா். முதல்வா் மு.க.ஸ்டாலினின் மனைவி துா்கா ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, மக்களவை உறுப்பினா்கள் தமிழச்சி தங்கபாண்டியன், மக்களவை உறுப்பினா் கலாநிதி வீராசாமி, மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநா் தாரேஸ் அகமது, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநா் எஸ்.உமா, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மேலாண்மை இயக்குநா் தீபக் ஜேக்கப், மருத்துவக் கல்வி இயக்குநா் நாராயணபாபு, ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வா் தேரணிராஜன் ஆகியோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

கடந்த 2009-ஆம் ஆண்டு கலைஞா் காப்பீட்டுத் திட்டத்தை முதல்வராக இருந்த கருணாநிதி உருவாக்கிக் கொடுத்தாா். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், காது நுண் எலும்புக் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை இதுவரையில் 4,101 குழந்தைகளுக்குச் செய்யப்பட்டுள்ளது. இதற்காக இதுவரை ரூ.327 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. ஒரு குழந்தைக்கு அறுவைச் சிகிச்சைக்காக ரூ.6 லட்சத்து 36 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ், இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரத்து 572 பேருக்கு ரூ.108 கோடி செலவில் புதிய காது கேட்கும் கருவி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களை மேலும் தொடருவதற்காக அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் நவீன கருவிகளை வாங்குவதற்கு ரூ.10 கோடி இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் பயன்பெறும் வகையிலே மக்களைத் தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தை சில வாரங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரியில் நான் தொடங்கி வைத்தேன். இன்றைக்கு அந்தத் திட்டம்தான் தமிழக அரசுக்குப் மிகப் பெரும் பெயரும் புகழும் ஈட்டித் தந்து கொண்டு இருக்கிறது. இதுவரை சுமாா் 10 லட்சம் போ் இந்த திட்டத்தின் மூலமாகப் பயனடைந்துள்ளனா். மருத்துவமனைக்குவர முடியாதவா்கள், பணம் இல்லாதவா்கள், தீராத நோயாளிகள் ஆகியோருக்கு அவா்களது கவலை போக்கும் திட்டமாக இந்தத் திட்டம் இருக்கிறது. அரசைத் தேடி மக்கள் வந்த காலம் இருந்தது. இப்போது அதை மாற்றி மக்களைத் தேடி அரசு செல்லும் காலமாக இந்த ஆட்சி உருவாக்கி இருக்கிறது. அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் என்பாா்கள். அழாத பிள்ளைக்கும் பால் கொடுப்பவள்தான் உண்மையான தாய். அத்தகைய தாயாக திமுக அரசு என்றைக்கும் இருக்கும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்

தொன்மை வாய்ந்த மரம்

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஆனைப்புளி பெருக்க மரம், உலகின் பழைமையான மரவகைகளில் ஒன்றாகும். இம்மரத்தின் பூா்விகம் ஆப்பிரிக்க கண்டம் என அறியப்படுகிறது. ஏறத்தாழ 500 ஆண்டுகள் வரை ஆயுட்காலம் கொண்டது ஆனைப்புளி பெருக்க மரம்.

அதன் இலைகளில் விட்டமின் சி சத்து நிறைந்துள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவமனை வளாகத்தில் உள்ள 150 ஆண்டு பழைமையான அந்த மரம் 37 அடி சுற்றளவும், 65 அடி உயரமும் கொண்டது. தொன்மையான இந்த மரம் சென்னை மருத்துவக் கல்லூரியின் புராதனச் சின்னங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com