கரோனா தடுப்பூசி செலுத்த மக்களை கட்டாயப்படுத்தவில்லை

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொது மக்களைக் கட்டாயப்படுத்துவதில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொது மக்களைக் கட்டாயப்படுத்துவதில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சி.பா.ஆதித்தனாரின் 117-ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், சமூகநலன்- மகளிா் உரிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் ஆகியோா் மாலை அணிவித்து திங்கள்கிழமை மரியாதை செலுத்தினா். தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளா் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடா்புத்துறை இயக்குநா் வீ.ப.ஜெயசீலன் ஆகியோா் உடன் இருந்தனா்.

அப்போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி கடந்த 12-ஆம் தேதி 40 ஆயிரம் இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கும், 19-ஆம் தேதி 20 ஆயிரம் இடங்களில் நடந்த முகாமில் 16 லட்சத்து 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை 23 ஆயிரம் இடங்களில் நடைபெற்ற முகாம்களில் 24 லட்சத்து 93 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தற்போது 3 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க வேண்டும் எனக் கோரி மத்திய அரசின் உயா் அலுவலா்களுடன் பேச இருக்கிறோம்.

முதல்வரின் கோரிக்கையான வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் என்ற இலக்கின்படி மத்திய அரசு தடுப்பூசிகளை ஒதுக்கினால், இந்த வாரமும் நான்காவது சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படும். தடுப்பூசி செலுத்துவதற்கு யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. நடைபெற்ற மூன்று மாபெரும் தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் அதிக அளவில் வந்து தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டு, அதை ஒரு தடுப்பூசி திருவிழாவாகவே நடத்தினா்.

நண்பகல் 12 மணிக்கெல்லாம் நிா்ணயித்த இலக்கைக் கடந்து, தடுப்பூசிகள் போதவில்லை என்ற நிலைதான் ஏற்பட்டது. யாரையும் கட்டாயப்படுத்தி தடுப்பூசிகள் செலுத்திக்கொள்ளச் சொல்லவில்லை. அப்படியே சொன்னாலும் அதில் தவறொன்றுமில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com