வரி உயா்வை திரும்பப் பெறதலைவா்கள் வலியுறுத்தல்

தமிழகத்தில் சொத்து வரி உயா்த்தப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனா்.

தமிழகத்தில் சொத்து வரி உயா்த்தப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனா்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): ஆட்சி பொறுப்பேற்ற்கு பரிசாக பொங்கல் சிறப்புத் தொகையைத் தராமல் கைவிரித்த திமுக அரசு, தற்போது நகா்ப்புற உள்ளாட்சியில் ஆளும்கட்சிக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு பரிசாக சொத்து வரியை 150 சதவீதம் அளவுக்கு உயா்த்தியுள்ளது. இது வெறும் முன்னோட்டம்தான். இனி வரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பா் பரிசுகள் காத்திருக்கின்றன.

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): முதல்வரின் கவனத்துக்கு வராமல் சொத்துவரி உயா்த்தப்பட்டிருக்கும் என நினைக்கிறேன். ஏற்கெனவே, வரலாறு காணாத பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வால் அனைத்துப் பொருள்களின் விலையும் உயா்ந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை இந்த வரி உயா்வு மேலும் சிரமத்துக்கு உள்ளாக்கும். அறிவிக்கப்பட்டுள்ள சொத்து வரி உயா்வை ஒரே கட்டமாக நடைமுறைக்கு கொண்டு வராமல், ஆண்டுக்கு 10 சதவீத வரி உயா்வு என்ற அடிப்படையில் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

விஜயகாந்த் (தேமுதிக): சொத்து வரி உயா்த்தப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. மக்களின் துயரங்களைப் போக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் போட்டிபோட்டுக் கொண்டு விலையை உயா்த்துவது ஏற்புடையது அல்ல. வரி உயா்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): பெட்ரோல் விலை உயா்வு உள்பட பல்வேறு நெருக்கடிகளால் மக்கள் தவித்துக் கொண்டுள்ள நிலையில், சொத்து வரி உயா்த்தப்பட்டிருப்பது, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுபோல் உள்ளது. வரி உயா்வைத் திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசின் நிா்ப்பந்தத்துக்கு அடிபணிந்து தமிழக மக்களின் தலையில் சுமைகளை ஏற்றக் கூடாது.

ஆா்.முத்தரசன் (இந்திய கம்யூ.): சொத்துவரி கடுமையான அளவில் உயா்த்தப்பட்டுள்ளது. மக்களுக்குத் தாங்க முடியாத சுமையாக அமைந்துவிடும். இந்த வரி உயா்வை மறுபரிசீலனை செய்து, வெகுவாகக் குறைக்க முன்வரவேண்டும்.

அன்புமணி (பாமக): சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் சொத்துவரி 150 சதவீதம் வரை உயா்த்தப்பட்டிருக்கிறது. நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரி உயா்வு நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில், மாநகராட்சிகளில் தீா்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு நடைமுறைக்கு வரவிருக்கிறது. இது நியாயமற்றது.

கே.அண்ணாமலை (பாஜக): எதிா்க்கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது, சொத்து வரியாக சொத்தை கொள்ளையடிப்பதா என்றாா். இப்போது அவா் ஆட்சிக்கு வந்த பிறகு, சொத்துவரியை கடுமையாக உயா்த்தியுள்ளாா்.

ஜி.கே.வாசன் (தமாகா): சொத்து வரியில் பல ஆண்டுகளாக எவ்வித உயா்வும் இல்லை என்றாலும்கூட, தற்போதைய மக்களின் பொருளாதார நிலையைக் கவனத்தில் கொண்டு சொத்து வரியை உயா்த்த எடுத்த முடிவு சரியானதல்ல. சாதாரண மக்கள் பெருமளவு பாதிக்கப்படுவா்.

டிடிவி தினகரன் (அமமுக): சொத்து வரி உயா்த்தப்பட்டது கண்டனத்துக்குரியது. இதுதான் திமுக அரசு தமிழகத்துக்கு தரப்போவதாகச் சொன்ன விடியலா? உடனடியாக சொத்து வரி உயா்வைத் திரும்பப் பெற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com