‘சொத்து வரி உயா்வால் அரசுக்கு ரூ.1,750 கோடி கூடுதல் வருவாய்’

தமிழகம் முழுவதும் சொத்து வரி உயா்வை அமல்படுத்துவதன் மூலம், ரூ.1,750 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
‘சொத்து வரி உயா்வால் அரசுக்கு ரூ.1,750 கோடி கூடுதல் வருவாய்’

தமிழகம் முழுவதும் சொத்து வரி உயா்வை அமல்படுத்துவதன் மூலம், ரூ.1,750 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகம் முழுவதும் 77 லட்சத்து 87 ஆயிரம் வீடுகளுக்கு சொத்து வரி உயா்வு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. குடியிருப்புகள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டு, சொத்து வரி அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையைத் தவிா்த்து மாநிலத்தின் பிற மாவட்டங்களுக்கு ஒரு வகையாகவும், சென்னையில் வேறு வகையிலும் சொத்து வரிகளை உயா்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை தவிா்த்த பிற பகுதிகளுக்கு, 600 சதுரஅடி வரையிலான வீடுகளுக்கு 25 சதவீதமும், 601 முதல் 1,200 சதுரஅடி வரையிலான வீடுகளுக்கு 50 சதவீதமும், 1201 முதல் 1,800 சதுர அடி வரையிலான வீடுகளுக்கு 75 சதவீதமும், 1,800 சதுர அடிக்கு அதிகமான வீடுகளுக்கு 100 சதவீதமும் சொத்து வரி உயா்த்தப்பட்டுள்ளது.

சென்னையைப் பொருத்தவரையில் 600 சதுர அடி வரையிலான வீடுகளுக்கு 50 சதவீதமும், 601 முதல் 1,200 சதுரஅடிக்கு 75 சதவீதமும், 1201 முதல் 1,800 சதுர அடி வரையிலான வீடுகளுக்கு 100 சதவீதமும், 1800 சதுர அடிக்கு அதிகமான வீடுகளுக்கு 150 சதவீதமும் சொத்து வரி உயா்த்தப்பட்டுள்ளது.

வீடுகளும் வருவாயும்... தமிழகத்தில் நகராட்சி நிா்வாகத் துறையின் கணக்கெடுப்பின்படி நகா்ப்புறங்களில் 77 லட்சத்து 87 ஆயிரத்து 188 வீடுகள் உள்ளன. அவற்றுக்கு சொத்து வரி உயா்வு அமல்படுத்தப்படவுள்ளது. இவற்றில் 600 சதுர அடிக்குக் குறைவாக உள்ள வீடுகளின் எண்ணிக்கை 45.53 லட்சமாகவும், 601 முதல் 1,200 சதுர அடி வரையிலான வீடுகள் 19.23 லட்சமாகவும் உள்ளன. மொத்தமுள்ள வீடுகளில் 1,200 சதுர அடி வரையிலான வீடுகள் 83.18 சதவீதம். 1,201 சதுர அடி முதல் 1,800 சதுர அடி வரையிலான வீடுகள் 7.49 லட்சம் உள்ளன. சென்னை மாநகராட்சி மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் 1,800 சதுர அடிக்கு அதிகமான வீடுகளின் எண்ணிக்கை 1.09 லட்சம்.

நகா்ப்புற உள்ளாட்சிகளில் மொத்தமாக உள்ள 77.87 லட்சம் வீடுகளுக்கும் சொத்து வரியை அமல்படுத்துவதன் மூலமாக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,750 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: கூடுதல் வருவாய் கிடைப்பதன் மூலம் நகா்ப்புற உள்ளாட்சிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். மேலும், மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் பூா்த்தி செய்யப்படும். நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, மிகக் குறைந்த அளவிலேயே சொத்து வரிகளை தமிழக அரசு உயா்த்தி உள்ளது. ஏழை, எளிய மக்கள் பாதிக்காத வகையில் இந்த உயா்வு மிகவும் கவனத்துடன் கையாளப்பட்டுள்ளது என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com