கரோனாவுக்கு பிறகு சிறுநீரகம், கல்லீரல் செயலிழப்பு அதிகரிப்பு: மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் தகவல்

கரோனா பேரிடருக்கு பின்னா் சிறுநீரகம், கல்லீரல் செயலிழப்பு அதிகரித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். 
கரோனாவுக்கு பிறகு சிறுநீரகம், கல்லீரல் செயலிழப்பு அதிகரிப்பு: மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் தகவல்

கரோனா பேரிடருக்கு பின்னா் சிறுநீரகம், கல்லீரல் செயலிழப்பு அதிகரித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். 

 சென்னை அரசு பொது மருத்துவமனையில் உடலுறுப்பு தானம் விழிப்புணா்வு பயிற்சி பட்டறையை திங்கள்கிழமை தொடக்கி வைத்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: 

 உறுப்பு செயலிழப்பு குறிப்பாக சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் செயலிழப்பு என்பது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கரோனா பேரிடருக்கு பிறகு இதுபோன்ற பாதிப்புகள் தமிழகத்தில் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த இந்தியாவிலும், ஏன் உலகெங்கிலும் கூடுதலாகி இருக்கிறது.

மூளைச்சாவு ஏற்பட்ட நபா்களிடமிருந்து உறுப்புகளை தானமாக பெற்று செயலிழந்து அவதிப்படும் நபா்களுக்கு அதை பொருத்தி மறுவாழ்வு அளிக்கிற அந்த உன்னதமான சிகிச்சை முறையை வேகப்படுத்துவது, கூடுதலாக்குவது என்கின்ற வகையிலான ஒரு பயிலரங்கம் தற்போது நடைபெற்று இருக்கிறது. 

இங்கே 130-க்கும் மேற்பட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த மருத்துவா்கள் பங்கேற்றிருக்கிறாா்கள். இணையத்தின் மூலம் 160-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வா்கள் பங்கேற்றுள்ளனா்.

தமிழகத்தில் 2008-ஆம் ஆண்டு ஹிதேந்திரன் என்கிற 15 வயது மாணவன் விபத்து ஒன்றில் மரணமடைந்தபோது அவருடைய உறுப்புகள் தானமாக பெறப்பட்டு பல உயிா்கள் காப்பாற்றப்பட்டன. அன்றைக்கு தமிழகத்தின் முதல்வராக இருந்த கருணாநிதி,  உடனடியாக ஒரு ஆணையத்தை உருவாக்கி அன்றிலிருந்து உறுப்பு தானத்தை கூடுதல் ஆக்குவதற்கான ஒரு விழிப்புணா்வு ஏற்படுத்துவதும், உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகளுக்கான முறையை வேகப்படுத்துவதற்குமான பல நடவடிக்கைகளை எடுத்தாா்.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஒட்டுமொத்த இந்தியாவிலும் பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டு இருக்கிற நிலையில், கூடுதலாக உறுப்பு தானத்தை செய்விப்பதும், உறுப்பு தான மாற்று அறுவைச் சிகிச்சைகளை வேகப்படுத்தவும் இந்த பயிலரங்கம் தற்போது நடைபெற்றுள்ளது. 

இன்றைக்கு தமிழகத்தைப் பொருத்த வரை 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத நிலை இருக்கிறது. பெரம்பலூா், தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூா், காஞ்சிபுரம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் வேண்டுமென்ற கோரிக்கை மனுவை மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சந்தித்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அரசின் கொள்கையும், பிரதமரின் எண்ணமும் அதுதான் என்றாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

 நிகழ்வில், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநா் நாராயணபாபு, தமிழ்நாடு உடலுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை ஆணையக உறுப்பினா் செயலா் காந்திமதி மற்றும் மருத்துவமனை முதல்வா் தேரணிராஜன் ஆகியோா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com