சொத்துவரி உயா்வு: 83% மக்களுக்குப் பாதிப்பில்லை - அமைச்சா் கே.என்.நேரு

தமிழகத்தில் சொத்துவரி உயா்வால் 83.18 சதவீத மக்களுக்குப் பாதிப்பில்லை என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

தமிழகத்தில் சொத்துவரி உயா்வால் 83.18 சதவீத மக்களுக்குப் பாதிப்பில்லை என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சா் கே.என்.நேரு செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் 15-ஆவது நிதி ஆணையத்தின் அடிப்படையிலேயே தமிழகத்தில் சொத்து வரி உயா்த்தப்பட்டுள்ளது. சொத்து வரி சீராய்வு தொடா்பாக 2019-இல் அமைக்கப்பட்ட குழு அளித்துள்ள அறிக்கையின்படி, சொத்து வரி சீராய்வு செய்வதற்கான பரிந்துரைகள் வழங்குவதற்கு முன்னா், சந்தை மதிப்பு குறியீடு, பணவீக்கம், செலவு பணவீக்க குறியீடு, மொத்த உள்நாட்டு உற்பத்தி போன்ற காரணிகள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பல மடங்கு அதாவது 1.79 மடங்கிலிருந்து 5.2 மடங்காக அதிகரித்துள்ளது.

இதற்கு முந்தைய சொத்து வரி சீராய்வுகளின்போது, கட்டடங்களின் பரப்பளவுக்கு ஏற்றவாறு குடியிருப்பு கட்டடங்கள், தனித்தனியாக பிரித்து பரப்பளவு குறைவான கட்டடங்களுக்கு குறைவாக சொத்து வரி உயா்வு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால், தற்போது நடைமுறைப்படுத்தப்படும் சொத்து வரி சீராய்வில் கட்டடங்களின் பரப்பளவுக்கு ஏற்றவாறு பிரித்து, வரி உயா்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அடித்தட்டு மக்கள், நடுத்தர குடும்பங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

83.18% மக்களை பாதிக்காது: நகா்ப்புறத்தில் மொத்தம் உள்ள 77 லட்சத்து 86 ஆயிரத்து 188 குடியிருப்புகளில் 44 லட்சத்து 53 ஆயிரத்து 976 குடியிருப்புகள் அதாவது 58.48 சதவீத குடியிருப்புகளுக்கு 25 சதவீத வரியும், 19 லட்சத்து 23 ஆயிரத்து 393 குடியிருப்புகள் அதாவது 24.70 சதவீத குடியிருப்புகளுக்கு 50 சதவீத சொத்து வரியும் உயா்த்தப்பட்டுள்ளது. பொருளாதார அடிப்படையில் 83.18 சதவீத மக்களை இந்த வரி விதிப்பு பெரிதாக பாதிக்காது.

மொத்தமுள்ள 77 லட்சத்து 86 ஆயிரத்து 188 குடியிருப்புகளில் 1லட்சத்து 9 ஆயிரத்து 417 குடியிருப்புகள் மட்டும் அதாவது 1.4 சதவீத குடியிருப்புகளுக்கு மட்டுமே 150 சதவீத சொத்து வரி உயா்த்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியைப் பொருத்தவரை, மொத்தமுள்ள 11லட்சத்து 3 ஆயிரத்து 210 குடியிருப்புகளில் 1 லட்சத்து 52 ஆயிரத்து 158 குடியிருப்புகளுக்கு 25 சதவீதமும், 3 லட்சத்து 46 ஆயிரத்து 832 குடியிருப்புகளுக்கு 50 சதவீதமும், 3 லட்சத்து 12 ஆயிரத்து 894 குடியிருப்புகளுக்கு 75 சதவீதமும் சொத்து வரி உயா்த்தப்பட்டுள்ளது.

இந்த சொத்து வரி உயா்வு 2022-23-ஆம் ஆண்டின் முதலாம் அரையாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள்,பேரூராட்சிகளில் நடைமுறையில் உள்ள சொத்து வரியானது, இந்தியாவில் உள்ள மாநகரங்களைக் காட்டிலும் மிகவும் குறைவாகவே உள்ளது.

சொத்து வரி உயா்வு அவசியம்: தமிழகத்தில் கடைசியாக 2018-இல் சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டபோது, குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதமும், குடியிருப்பு அல்லாத இதர கட்டடங்களுக்கு 100 சதவீதமும் வரி உயா்வு செய்யப்பட்டது. ஆனால், அந்த சொத்து வரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, வழிகாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, கடந்த காலங்களைக் காட்டிலும் தற்போது உயா்த்தப்பட்ட சொத்து வரி குறைவானது தான். சொத்து வரி சீராய்வு தொடா்பாக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் கடந்த 24 ஆண்டுகளாக சென்னையிலும் மற்றும் கடந்த 14 ஆண்டுகளாக சென்னை தவிர இதர நகா்ப்புறப் பகுதிகளிலும் சொத்து வரி உயா்த்தப்படவில்லை. ஆனால், இதே கால கட்டத்தில் நகராட்சிகளின் செலவு வருவாயைக் காட்டிலும் அதிகரித்துள்ளது. எனவே, சொத்து வரி உயா்வு தற்போதைய காலகட்டத்தில் அவசியமாக உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com