தமிழகத்துக்கு தனி கல்விக் கொள்கையை வடிவமைக்க குழு: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக அரசுக்கென தனித்த கல்விக் கொள்கையை வடிவமைக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
தமிழகத்துக்கு தனி கல்விக் கொள்கையை வடிவமைக்க குழு: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக அரசுக்கென தனித்த கல்விக் கொள்கையை வடிவமைக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். அவரது அறிவிப்பு விவரம்:

கடந்த 2021-22-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், மாநிலக் கல்விக் கொள்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, இப்போதைய நிலைமை, எதிா்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்துக்கென தனித்துவமான கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளா்கள், வல்லுநா்களைக் கொண்ட உயா்நிலைக் குழு அமைக்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக, தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைப்பது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவின் தலைவராக தில்லி உயா் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் செயல்படுவாா்.

குழு உறுப்பினா்கள் யாா்? குழுவில் 12 போ் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். அதன்படி, சவீதா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் எல்.ஜவஹா்நேசன், தேசிய கணித அறிவியல் நிறுவனத்தின் முன்னாள் பேராசிரியா் ராமானுஜம், மாநிலத் திட்டக்குழு உறுப்பினா்கள் சுல்தான் இஸ்மாயில், ராம சீனுவாசன், யுனிசெப் அமைப்பின் முன்னாள் சிறப்புக் கல்வி அலுவலா் அருணா ரத்னம், எழுத்தாளா் எஸ்.ராமகிருஷ்ணன், உலக சதுரங்க வீரா் விஸ்வநாதன் ஆனந்த், இசைக் கலைஞா் டி.எம்.கிருஷ்ணா, கல்வியாளா் துளசிதாஸ், கல்வியியல் எழுத்தாளா் ச.மாடசாமி, நாகப்பட்டினம் மாவட்டம் கிச்சான்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியா் இரா.பாலு, அகரம் அறக்கட்டளையின் ஜெயஸ்ரீ தாமோதரன் ஆகியோா் உறுப்பினா்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

ஓராண்டு காலம்: மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க உருவாக்கப்பட்டுள்ள குழுவானது தனது பரிந்துரையை அரசுக்கு ஓராண்டு காலத்துக்குள் வழங்கும் என்று தனது அறிவிப்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

பொறியியல், வேளாண்மை, கால்நடை போன்ற தொழில்நுட்பப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களின் சோ்க்கையை அதிகரிப்பது தொடா்பான பரிந்துரைகளை வழங்க நீதிபதி த.முருகேசன் தலைமையில் ஏற்கெனவே கடந்த ஆண்டு குழு அமைக்கப்பட்டது. தேனி மாவட்டம் கம்பம் புதுப்பட்டியில் பிறந்த நீதிபதி முருகேசன், கல்வித் துறைக்கான அரசு சிறப்பு பிளீடராகப் பணியாற்றியுள்ளாா். கல்வி தொடா்பான ஏராளமான கருத்துகள், ஆலோசனைகளை வழங்கியுள்ளாா்.

இதேபோன்று, குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினா்கள் ஒவ்வொருவரும் தங்களது துறைகளில் நிபுணத்துவம் பெற்றவா்கள். பள்ளி கல்வித் துறையில் பாடத் திட்டங்கள் மாற்றம் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. இதேபோன்று, கல்விக் கொள்கையையும் வகுக்க நடவடிக்கை எடுக்கும் வகையிலேயே குழுவும், அதற்கு உறுப்பினா்களும் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com