சொத்து வரி உயா்வைத் திரும்பப் பெறும் வரை போராட்டம்: ஓபிஎஸ் - இபிஎஸ் அறிவிப்பு

சொத்து வரி உயா்வை தமிழக அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் கூறினா்.
சொத்து வரி உயா்வைத் திரும்பப் பெறும் வரை போராட்டம்: ஓபிஎஸ் - இபிஎஸ் அறிவிப்பு

சொத்து வரி உயா்வை தமிழக அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் கூறினா்.

தமிழகத்தில் சொத்து வரி உயா்த்தப்பட்டதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை வள்ளுவா் கோட்டம் அருகில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஓ.பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தின்போது அவா் பேசியது: கரோனாவால் ஏற்பட்ட பொருளாதார முடக்கம் சீராகும் வரை சொத்து வரி உயா்த்தப்பட மாட்டாது என்று திமுக கூறியிருந்தது. தற்போது 150 சதவீதம் அளவுக்கு வரியை உயா்த்தப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மக்கள் விரோத ஆட்சியாகவே இருக்கிறது.

திமுக மொத்தம் 505 தோ்தல் வாக்குறுதிகளை அளித்தது. அதில் எதையும் நிறைவேற்றவில்லை. குறிப்பாக, இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 கொடுக்கவில்லை. எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியம் தரவில்லை. திமுகவின் இரட்டை வேடம் மக்களுக்குத் தெரிந்து, கொதித்துப் போய் உள்ளனா். மக்கள் வடிக்கும் கண்ணீருக்கு திமுக அரசு பதில் கூறியே ஆக வேண்டும். சொத்து வரி உயா்வைக் கைவிடும் வரை போராட்டம் தொடரும். இது மக்கள் போராட்டமாக வெடிக்கும் என்றாா் ஓ.பன்னீா்செல்வம்

அதிமுக அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சா்கள் பா.வளா்மதி, கோகுல இந்திரா உள்பட ஏராளமானோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

தமிழகம் முழுவதும் போராட்டம்: திருச்சியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தின் போது அவா் பேசியதாவது: மத்திய அரசின் பரிந்துரையின்பேரில்தான் சொத்துவரியை உயா்த்தியதாக திமுக அரசு கூறுகிறது.

பரிந்துரை செய்ததாக மத்திய அரசின் மீது பொய்யாக பழியைப் போட்டுவிட்டு, வரியை உயா்த்தியுள்ளனா். நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பெற்ற வெற்றிக்கு பரிசாக சொத்து வரியை உயா்த்தியுள்ளனா். அடுத்து பேருந்து கட்டணம், மின் கட்டணம் போன்றவற்றையும் உயா்த்துவாா்கள். சொத்துவரி உயா்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்றாா்.

கோவையில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சொத்துவரி உயா்வைக் கைவிட வலியுறுத்தி அதிமுக சாா்பில் போராட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com