மகாகவி பாரதியார் பார்த்த அக்கினிக் குஞ்சு இறைமையைக் காட்டுகிறது: டாக்டர் சுதா சேஷய்யன்

மகாகவி பாரதியார் பார்த்த அக்கினிக் குஞ்சு இறைமையைக் காட்டுகிறது: டாக்டர் சுதா சேஷய்யன்

மகாகவி பாரதியார் பார்த்த அக்கினிக் குஞ்சு இறைமையைக் காட்டுகிறது என்றார் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன்.

மகாகவி பாரதியார் பார்த்த அக்கினிக் குஞ்சு இறைமையைக் காட்டுகிறது என்றார் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன்.
 தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கத்தில் அவர் மேலும் பேசியது: மிகச் சிறியது முதல் மிகப்பெரிய கவிதைகள் வரை மகாகவி பாரதியிடம் காண முடியும். மகாகவி பாரதியினுடைய மிகச் சிறிய கவிதையாக நான்கு வரிகளில் காணப்படும் அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் என்கிற கவிதை குறிப்பிடப்படுகிறது. மேலோட்டமாகச் சொல்லிப் பார்த்தால் இக்கவிதையில் பெரிதாக ஒன்றுமில்லை.
 அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-- அதை, அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன், வெந்து தணிந்தது காடு - தழல், வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?, தத்தரிகிட தத்தரிகிட தத்தோம், என்கிற அவரது கவிதைக்குள் என்ன ஆழ்ந்த பொருளைத் தேடி விட முடியும் என்கிற வினா பலருக்கும் இருக்கலாம்.
 இதில் காடு என்பது என்னவாக இருக்க முடியும்? புத்தர் காடு என்று ஒன்றைக் குறிப்பார். ஏறத்தாழ அதே காட்டைத்தான் மகாகவி பாரதியாரும் அடையாளம் காட்டுகிறார். காடு, வெளியில் இல்லை; அது உள்ளே இருக்கிறது. நம் உள்ளுக்குள் குப்பைகள், சருகுகள், வேண்டாத புதர்கள், முள்ளுடன் கூடிய காட்டுச் செடிகள் போன்றவையே நிறைந்துள்ளன. இப்படியொரு காடு உள்ளுக்குள் இருக்கிறது. மகாகவி பாரதியார் கூற வரும் காட்டை வைத்துக் கொண்டு, இப்போது, அவர் கூறிய அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-- அதை, அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் என்ற வரியைப் பார்க்க வேண்டும்.
 அந்த அக்கினிக் குஞ்சு என்பது இறைமையைக் காட்டுகிறது. "நான் என்னுடைய உள்ளத்தில் வைத்த அந்த இறை சிந்தனையும், இந்த பிரபஞ்சத்தில் எல்லா இடத்திலேயும் பரந்து விரவிக்கிடக்கிற இறைத்தன்மையும், தழல், வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ? நெருப்பில் மூப்பு, இளையது எனக் கூற முடியாது. இதுவும், அதுவும் ஒன்றுதான் எனக் கண்டுபிடித்த உடனே, அவரை அறியாமல் வந்த மகிழ்ச்சியில் தத்தரிகிட தத்தரிகிட தத்தோம்' எனக் கூறியுள்ளார்.
 தெய்வம் நீ என்று உணர். அந்தத் தெய்வத்தன்மை வெளியிலோ, ஏதோ ஒரு வடிவத்திலோ, சமயத்திலோ இல்லை. ஆனால், தனக்குள் இருக்கிற தெய்வத்தன்மையும், இங்கே இருக்கிற தெய்வத்தன்மையும், பிரபஞ்சத்தில் இருக்கிற தெய்வத்தன்மையும் ஒன்று என்பதைப் புரிந்து கொண்டவுடன், தத்தரிகிட தத்தரிகிட தத்தோம் எனக் குறிப்பிட்டுள்ளார். இதுதான், மகாகவி பாரதியார் பார்த்த அந்த அக்கினிக் குஞ்சு. மகாகவியாக இந்த பிரபஞ்சத்தை அளந்த அந்தக் கவிஞருடைய புலன்கள் உணர்ந்து, உணர்ந்து தன்னையே பிரபஞ்சத்தின் சிறு பறவையாக மாற்றிக் கொண்ட தன்மைதான் தத்தரிகிட தத்தரிகிட தத்தோம் என்கிற அந்த நாட்டியம்.
 உங்கள் பார்வையில் அந்த அக்கினிக் குஞ்சு வேறு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எந்தக் கவிதைக்கும் முடிந்த முடிவு கிடையாது. உங்களால் ஒரு புதிய அக்கினிக் குஞ்சை பார்க்க முடியும் என்றால், அன்று நீங்களும் தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் என ஆடும்போது அந்த உணர்வு புரியும் என்றார் டாக்டர் சுதா சேஷய்யன்.
 இந்த நிகழ்ச்சிக்குத் துணைவேந்தர் வி. திருவள்ளுவன் தலைமை வகித்தார். முன்னதாக, பதிவாளர் (பொறுப்பு) க. சங்கர் வரவேற்றார். நிறைவாக, இலக்கியத் துறைத் தலைவர் பெ. இளையாப்பிள்ளை நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com