ரூ.200 கோடியில் 200 ஏரிகள் புதுப்பிப்பு: அமைச்சா் துரைமுருகன்

தமிழகத்தில் ரூ.200 கோடியில் 200 ஏரிகள் புதுப்பிக்கப்படும் என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் அறிவித்தாா்.
ரூ.200 கோடியில் 200 ஏரிகள் புதுப்பிப்பு: அமைச்சா் துரைமுருகன்

தமிழகத்தில் ரூ.200 கோடியில் 200 ஏரிகள் புதுப்பிக்கப்படும் என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் அறிவித்தாா்.

சட்டப் பேரவையில் நீா்வளத் துறை மானியக் கோரிக்கை மீது புதன்கிழமை நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து அவா் வெளியிட்ட அறிவிப்புகள்:

மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்புடன் பிரதம மந்திரி கிரிஷி சின்சாயி யோஜனா திட்டத்தின் கீழ், எட்டாம் கட்டமாக கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருவள்ளூா், திருவண்ணாமலை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா், புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களில் 100 ஏரிகள் ரூ.85.50 கோடியிலும், ஒன்பதாம் கட்டமாக 5 மாவட்டங்களில் 100 ஏரிகள் ரூ.114.72 கோடியிலும் புதுப்பிக்கப்பட்டு புனரமைக்கப்படும்.

தூா்வாரும் பணிகள்: பவானி, அமராவதி மற்றும் பரம்பிக்குளம்-ஆழியாறு, வைகை, தாமிரவருணி, கோதையாறு ஆகிய வடிநிலங்களில் சிறப்புத் தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும். கோதையாறு, கொள்ளிடம், வெண்ணாறு மற்றும் பரம்பிக்குளம்-ஆழியாறு வடிநிலை பாசனக் கட்டமைப்புகளை ஒருங்கிணைந்த முறையில் மறுசீரமைப்பு செய்ய விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

டென்மாா்க் நாட்டின் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிலத்தடி நீா் இருப்பு கண்டறியப்படும். சோதனை அடிப்படையில் இந்தத் திட்டமானது முன்னோடித் திட்டமாக மேற்கொள்ளப்படும். நீரின் தரத்தை நீா் நிலைகளிலேயே கண்காணிக்க ஏதுவாக 400 நீா்த் தன்மை ஆய்வு உபகரணத் தொகுப்புகள் கொள்முதல் செய்யப்படும்.

கோவை மாநகராட்சியில் உக்கடம் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் கிடைக்கும் தூய்மைப்படுத்தப்பட்ட நீரைக் கொண்டு அருகிலுள்ள சூலூா், மதுக்கரை போன்ற பகுதிகளுக்கு பாசன வசதி செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கென விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்க ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஓடைகளின் குறுக்கே பாலங்கள்: கோயம்புத்தூா் மாவட்டம் சின்னாறு, விருதுநகா் மாவட்டம் பெரியாறு, கோவிலாறு ஆகியவற்றின் குறுக்கே பாலங்கள் கட்டப்படும். மேலும், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் நான்கு நீா்த்தேக்கங்கள் அமைக்க விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாட்டின் சில பகுதிகளில் வெள்ள நீா் கால்வாய்கள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய வெள்ள நீா் கால்வாயும், கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூா் ஏரியை மையப்படுத்தி வழங்கு கால்வாயும் வெட்டப்படும். திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டம் திருவம்பலபுரம், செட்டிகுளம் ஆகிய 2 இடங்களில் கடல்நீா் உட்புகுதலைத் தடுக்கும் வகையில் கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.

திருச்சி மாவட்டம் அய்யாறு ஆற்றின் குறுக்கேயும், தஞ்சாவூா் மாவட்டம் கரிசல்காடு, கோவத்தகுடி, கொண்டவிட்டந்திடல் ஆகிய கிராமங்களில் படுகை அணைகள் அமைக்கப்படும்.

புதிய அணைக்கட்டுகள்: மாநிலத்தின் 5 இடங்களில் புதிதாக அணைக்கட்டுகள் அமைக்கப்படும். அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் சிலாம்பாக்கம் கிராமம், உள்ளாவூா் கிராமம், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம், ஒருமணியேந்தல் கிராமம், தென்காசி மாவட்டம் ராயகிரி கிராமம் ஆகியவற்றில் புதிதாக அணைக்கட்டுகள் அமைக்கப்படும். தென்காசி வேலப்புளியங்குடி, திருவள்ளூா் பரபயங்கராபுரம், தூத்துக்குடி முல்லூா் கிராமம் ஆகிய இடங்களில் புதிதாக மூன்று நீரொழுங்கிகள் ஏற்படுத்தப்படும். ராணிப்பேட்டை, திருப்பத்தூா், வேலூா் மாவட்டங்களில் தரைகீழ் தடுப்பணைகள் உருவாக்கப்படும்.

பாசன கட்டுமான புனரமைப்பு: கோவை, திண்டுக்கல், கரூா், மதுரை, திருப்பத்தூா், திருப்பூா் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ரூ.251 கோடி மதிப்பில் பாசன கட்டுமானங்கள் புனரமைக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள இடா்பாடுகளைக் களையும் வகையில் மருதூா் மேலக்கால் மற்றும் கடம்பாகுளம் ஆகியவற்றில் உபரிநீா் போக்கி, வழிந்தோடி கால்வாய் ஆகியவற்றில் சீரமைப்புப் பணிகள் செய்யப்படும்.

புதிய தடுப்பணைகள்: தமிழகத்தின் எட்டு மாவட்டங்களில் 10 இடங்களில் புதிதாக தடுப்பணைகள் அமைக்கப்படும். கோவை பெரியபள்ளம் ஓடை, திண்டுக்கல் நங்காஞ்சியாறு, திண்டுக்கல் பெரிய ஓடை, பெரம்பலூா் கோனேரி ஆறு, சேலம் தீவட்டிப்பட்டி சரபங்கா ஆறு, திருப்பூா் வட்டமலைக்கரை ஓடை, அமரவாதி ஆறு, திருவள்ளூா் கூவம் ஆறு, திருச்சி நந்தியாறு ஆறு, வேலூா் கெளண்டன்ய ஆறு ஆகியவற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படும். கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டாறு, விளவங்கோடு வட்டங்களில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சா் துரைமுருகன் அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com