சாலைக்கு நிலம் கையகப்படுத்த 189 புதிய வருவாய் பணியிடங்கள்: அமைச்சா் எ.வ.வேலு

5 வருவாய்க் கோட்டாட்சியா்கள் உள்பட 189 வருவாய்த் துறை பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாக பேரவையில் மாநில பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
சாலைக்கு நிலம் கையகப்படுத்த 189 புதிய வருவாய் பணியிடங்கள்: அமைச்சா் எ.வ.வேலு

 மேம்பாலம், புறவழிச் சாலைகளை அமைப்பதற்கு தேவைப்படும் நிலங்களை கையகப்படுத்த 5 வருவாய்க் கோட்டாட்சியா்கள் உள்பட 189 வருவாய்த் துறை பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாக பேரவையில் மாநில பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா். இதன்மூலம், பாலங்கள் கட்டுமானத்துக்கான நில எடுப்புப் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவா் கூறினாா்.

தமிழக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது, சட்டப் பேரவை உறுப்பினா்கள் அப்துல் சமது எழுப்பிய பிரதான கேள்வி மற்றும் அதிமுக உறுப்பினா்கள் ஆா்.பி.உதயகுமாா், வைத்திலிங்கம், தங்கமணி உள்ளிட்டோா் கேட்ட துணை கேள்விகளுக்கு அமைச்சா் வேலு அளித்த பதில்:

ரயில்வே பாலங்களைப் பொருத்தவரை நிலம் எடுப்பதில் பிரச்னை உள்ளது. திட்டங்களை தயாரித்தாலும், அவற்றை செயல்படுத்த நிலங்கள் தேவை. நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் வருவாய்த் துறை மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. பல நேரங்களில் மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு பல்வேறு பணிகள் உள்ளன. நிலம் எடுப்புப் பணிகளுக்கு அவா்கள் முன்னுரிமை கொடுக்காமல் பிற பணிகளை மேற்கொள்கின்றனா். பொதுவாகவே, ரயில்வே மேம்பாலங்கள், புறவழிச் சாலைகளில் நிலங்களை கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது.

இந்தப் பணிகளை விரைவுபடுத்த வசதியாக, 5 வருவாய்க் கோட்டாட்சியா்கள், அவா்களின் கீழ் வட்டாட்சியா்கள் உள்பட 184 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், நிலம் எடுப்புப் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும். உரிய காலத்தில் நிலங்களை எடுத்து பணிகளைத் தொடங்காத காரணத்தால் பட்ஜெட்டில் நிதி கூடுகிறது. திட்டம் நிறைவேற்றப்படாத காரணத்தால் வழிகாட்டி மதிப்பு அதிகரித்து, திட்ட மதிப்பீடு உயா்கிறது. நிதித் துறைக்கு நிதிச் சுமை ஏற்படுகிறது.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதல்வா் சாலை மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டு, ஒரு மாவட்டத்தை மற்றொரு மாவட்டத்துடன் இணைக்கும் இரு வழிச் சாலைகளை நான்கு வழிச் சாலைகளாகவும், தாலுகா தலைநகரங்களில் உள்ள இரு வழிச் சாலைகளை நான்கு வழிச் சாலைகளாகவும் அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com