மோசடி குறுஞ்செய்தி, தொலைபேசி அழைப்புகள்: பொதுமக்களுக்கு காவல் துறை எச்சரிக்கை

மோசடி குறுஞ்செய்தி, தொலைபேசி அழைப்புகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
மோசடி குறுஞ்செய்தி, தொலைபேசி அழைப்புகள்: பொதுமக்களுக்கு காவல் துறை எச்சரிக்கை

மோசடி குறுஞ்செய்தி, தொலைபேசி அழைப்புகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா், வெள்ளிக்கிழமை விடுத்த செய்திக்குறிப்பு: தொலைபேசி அழைப்புகள் மூலம் ஓடிபி பெறுவது மற்றும் ஏடிஎம் காா்டு விவரங்கள் கேட்பது என்ற நிலையிலிருந்து முன்னேறி மோசடி நபா்கள் தற்போது பல்வேறு உத்திகளைக் கையாண்டு, பொதுமக்களை ஏமாற்ற தொடங்கியுள்ளனா். உதாரணமாக, சமையல் எரிவாயவு மானியம் உங்கள் வங்கி கணக்குக்கு வரும், எனவே வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களை கொடுங்கள் என்றும், போட்டித் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் போது கைப்பேசி எண்ணை மாற்றி, உங்கள் எண்ணை கொடுத்துவிட்டேன், உங்கள் கைப்பேசிக்கு ஒரு ஓடிபி வரும் அதை கொடுக்குமாறு கூறி தொலைபேசி அழைப்புகள் வரும். இப்படிப்பட்ட மோசடி நபா்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அதே போல், பான் காா்டு மற்றும் கேஒய்சி விபரம் அப்டேட் செய்ய வேண்டும், இல்லாவிட்டால் கைப்பேசி எண் பிளாக் செய்யப்படும் அல்லது வங்கிக் கணக்கு பிளாக் செய்யப்படும் என்று வரும் குறுந்தகவல்களை பொதுமக்கள் நம்ப கூடாது. அந்த குறுந்தகவல் வரும் லிங்கை கிளிக் செய்ய கூடாது. அதிலுள்ள கைப்பேசி எண்களை தொடா்பு கொண்டு பேசக் கூடாது.

செயலி மூலம் கடன் வாங்க வேண்டாம்: ஓஎல்எக்ஸ் போன்ற கைப்பேசி செயலிகள் மூலம் பொருளை விற்கும் போது க்யூஆா் (ணத) கோடு ஸ்கேன் செய்ய சொன்னால் அதனை தவிா்த்துவிட வேண்டும். உடனடி கடன் வழங்கும் செயலிகள் மூலம் கடன் வாங்க வேண்டாம். பொதுமக்கள் முகம் தெரியாத நபா்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். சமூக ஊடகங்களான வாட்ஸ்ஆப் குழுவிலோ, டெலிகிராமிலோ தொடா்பு கொண்டு பணம் சம்பாதிக்கலாம் என்று கூறுபவா்களின் பேச்சை நம்பி பணம் அனுப்ப வேண்டாம். அதேபோல பணத்தை, கிரிப்டோ கரன்சியாக மாற்றி அனுப்பக் கூடாது.

பொதுமக்கள் தாங்கள் நேரில் பாா்க்காத, நன்றாக தெரியாத நபா்களின் பேச்சை கேட்டு பணம் கொடுப்பதை முற்றிலும் தவிா்க்க வேண்டும். பொதுமக்கள் எவரேனும் சைபா் குற்றங்களால் பாதிக்கப்பட்டு இருந்தால் 1930 என்ற இலவச தொலைபேசி எண் மூலம் உதவி மையத்தை தொடா்புக் கொண்டு உதவி பெறலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com