ஆலங்குளம் அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு:  மாணவர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்

கல்குவாரி அமைக்க அனுமதி கொடுத்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கண்டித்து ஆலங்குளம் காமராஜர் சிலை அருகே 200 பள்ளி மாணவர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பள்ளி மாணவர்கள், மூன்று கிராம மக்கள்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பள்ளி மாணவர்கள், மூன்று கிராம மக்கள்.


தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தாலுகா மருதம்புத்தூர் கிராமத்தில் கல்குவாரி அமைக்க அனுமதி கொடுத்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கண்டித்து ஆலங்குளம் காமராஜர் சிலை அருகே 200 பள்ளி மாணவர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆலங்குளம் தாலுகா புதுப்பட்டி பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் உள்ளன. இங்கிருந்து தமிழகம் மற்றும் கேரளத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் ஆயிரக்கணக்கான டன் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. 

இந்நிலையில், புதுப்பட்டி கிராமத்தில் மேலும் ஒரு கல் குவாரி அமைக்க ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய முதல் கூட்டத்தின் போது அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு புதுப்பட்டி, மருதம்புத்தூர், காசிநாதபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து ஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்டோருக்கு மனுக்களை அனுப்பி வருகின்றனர். 

இதனிடையே இரு தினங்களுக்கு முன்பு குவாரி அமைக்க பூமி பூஜை போடப்பட்டது. ஏற்கனவே செயல்பட்டு வரும் குவாரிகளால் கிராமங்கள் புழுதி படலமாக காட்சி அளிப்பதோடு நிலத்தடி நீரும் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சுவாசக் கோளாறு உள்ளிட்ட உபாதைகளால் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், குவாரி அமைக்க அனுமதி வழங்கிய தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும், ஏற்கனவே இப்பகுதியில் செயல்பட்டு வரும் குவாரிகளை மூட வேண்டுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கிராம மக்கள் ஆலங்குளம் காமராஜர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். 

இதில், பள்ளி மாணவ-மாணவிகள் 200 பேர் உள்பட 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு குவாரிக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். அவர்களிடம் டிஎஸ்பி பொன்னரசு, வட்டாட்சியர் பரிமளா ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com