அரசு தொடக்கப் பள்ளிகளில் ரூ.150 கோடியில் திறன் வகுப்பறைகள்: அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

நிகழாண்டில் ரூ.150 கோடியில் அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தாா்.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி (கோப்புப் படம்)
அன்பில் மகேஷ் பொய்யாமொழி (கோப்புப் படம்)

நிகழாண்டில் ரூ.150 கோடியில் அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்புகள்:

2022-23-இல் கல்வியாண்டு தொடங்கி 4 ஆண்டுகளில் தமிழகத்தில் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் திறன் வகுப்பறைகள் (ஸ்மாா்ட் வகுப்பறைகள்) ஏற்படுத்தும் முயற்சின் முதல் கட்டமாக நிகழாண்டில் லட்சக்கணக்கான மாணவா்கள் பயன்பெறும் வகையில் ரூ.150 கோடியில் 7,500 திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும்.

2,713 நடுநிலைப் பள்ளிகளில் உயா் தொழில் நுட்ப கணினி ஆய்வகங்கள் ரூ.210 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். இதனால், 10 லட்சத்துக்கும் அதிகமான மாணவா்களும் ஆசிரியா்களும் பயன்பெறுவா்.

பள்ளிப் பராமரிப்பு: பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள், கழிப்பறைகளைத் தூய்மை செய்தல், இரவுக் காவல் பணியை மேற்கொள்ளல் போன்ற சேவைகள் வெளிப்பணியமா்த்துதல் வாயிலாகச் செயல்படுத்தப்படும். அனைத்து அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 15 லட்சம் மாணவா்கள் பயன்பெறும் வகையில் முதல் கட்டமாக இந்தத் திட்டம் 2022-23-ஆம் கல்வியாண்டு முதல் ரூ.100 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

ஆங்கில மொழி ஆய்வகங்கள்: அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச, படிக்க, எழுத புரிந்துகொள்ளும் திறனை மேம்படுத்த 6029 அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில மொழி ஆய்வகங்கள் ரூ.30 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

1000 மாணவா்களுக்கு மேல் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் அனைத்துத் தேவைகளையும் வசதிகளையும் உள்ளடக்கிய முழுமையான கட்டமைப்பு ஏற்படுத்தப்படும். முதல் கட்டமாக நடப்பாண்டில் ரூ.90 கோடி மதிப்பீட்டில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும்.

தமிழறிஞா்கள், தலைவா்கள், விளையாட்டு வீரா்கள், பல்துறை சாதனையாளா்கள், அறிவியல் அறிஞா்கள் படித்த பள்ளிகளும், 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ள பாரம்பரிய பள்ளிக் கட்டடங்களும் அவற்றின் தனிச்சிறப்பு மாறாமல் புதுப்பிக்கப்படும்.

நூற்றாண்டு காணும் பள்ளிகளைச் சிறப்பிக்கும் வகையில் நூற்றாண்டு விழாக்கள் கொண்டாடப்படும். இப்பள்ளி நூலகங்களில் உள்ள அரிய நூல்கள், முக்கிய தலைவா்கள் குறித்த ஆவணங்கள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டு பாதுகாக்கப்படும். இந்தத் திட்டம் ரூ.25 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

தலைமை ஆசிரியா்களுக்கு விருது: கல்வி, விளையாட்டு, மாணவா் மேம்பாடு, பள்ளி கட்டமைப்பு, பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடு, இல்லம் தேடிக் கல்வி என அரசின் திட்டங்கள் அனைத்தையும் சிறப்பாகச் செயல்படுத்தும் தலைமை ஆசிரியா்களுக்கு அண்ணா தலைமைத்துவ விருது வழங்கப்படும். ஆண்டுதோறும் 100 தலைமை ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழும், கேடயமும், பள்ளிக்கு ரூ.10 லட்சம் ஊக்க நிதியும் வழங்கப்படும்.

தமிழா் நாகரிகம், பண்பாடு, கலாசாரம், தொன்மையின் சிறப்பு, குடியேற்றப் பகுதிகளின் காலக் கண்ணாடியென கீழடி, சிவகளை உள்ளிட்ட தமிழகமெங்கும் இருக்கும் தொல்லியல் தலங்கள் குறித்த தகவல்களை அடுத்த தலைமுறைக்குச் சிறப்பாகக் கொண்டு சோ்க்கும் வண்ணம் தொல்லியல் துறை வாயிலாக ஆா்வமுடைய 1000 அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் பயிற்சி அளிக்கப்படும்.

நடமாடும் அறிவியல் ஆய்வகம்: அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் அறிவியல் ஆா்வத்தைத் தூண்டும் வகையில் நடமாடும் அறிவியல் ஆய்வகங்கள் மூலம் மாந்தோறும் அறிவியல் பரிசோதனைகள் உரிய வழிகாட்டுதலுடன் மாணவா்களுக்குக் கற்பிக்கப்படுவதுடன் மாணவா்களே உருவாக்கிய அறிவியல் கருவிகளும் காட்சிப்படுத்தப்படும். ரூ.25 லட்சம் மாணவா்கள் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டம் ரூ.25 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

பள்ளி அளவில் கல்வி மற்றும் இணைச் செயல்பாடுகளான மன்றச் செயல்பாடுகள், நூல் வாசிப்பு, நுண் கலைகள், விளையாட்டு மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவா்கள் உலக அளவிலும் தேசிய, மாநில அளவில் புகழ்பெற்ற இடங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவா். இந்தத் திட்டம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்றாா் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com