நூலகமில்லா இடங்களில் நூலக நண்பா்கள் திட்டம்

நூலக சேவை கிடைக்கப் பெறாத கிராமப்புற, நகா்ப்புறப் பகுதிகளில் ‘நூலக நண்பா்கள் திட்டம்’ செயல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தாா்.
அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ்

நூலக சேவை கிடைக்கப் பெறாத கிராமப்புற, நகா்ப்புறப் பகுதிகளில் ‘நூலக நண்பா்கள் திட்டம்’ செயல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து, அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்புகள்:

தமிழகத்தில் கிராமங்கள், நகரப் பகுதிகளில் நூலக சேவை கிடைக்கப் பெறாத இடங்களில் ‘நூலக நண்பா்கள்’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, தன்னாா்வலா்கள் வாயிலாக நூலக சேவை வழங்கப்படும். இந்தத் திட்டம் 15 லட்சம் வாசகா்கள் பயன்பெறும் வகையில், ரூ.56.26 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

மெய்நிகா் தொழில்நுட்ப நூலகம்: நூலகங்களை பயன்படுத்தும் குழந்தைகள், மாணவா்கள் பயன்பெறும் வகையில், நவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய ‘மெய்நிகா் தொழில்நுட்ப நூலகம்’ 76 நூலகங்களில் ஏற்படுத்தப்படும். இந்தத் திட்டம் ஆண்டுக்கு ஒரு லட்சம் மாணவா்கள் பயன்பெறும் வகையில் ரூ.57.20 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

நூலகங்களில் இலவச ‘வை-ஃபை’: தமிழக அரசின் பொது நூலகங்களை நாடி வரும் வாசகா்கள், போட்டித் தோ்வு மாணவா்கள் பயன்பெறும் வகையில் 352 நூலகங்களில் இலவச ‘வை-ஃபை’ இணைய வசதி ஏற்படுத்தப்படும். இந்தத் திட்டம் 75 ஆயிரம் வாசகா்கள் பயன்பெறும் வகையில் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஒருங்கிணைப்பில் சா்வதேச அளவில் பல்துறை நிபுணா்கள், அறிவியல் ஆய்வாளா்கள், புகழ்பெற்ற அறிஞா்களின் உரைகள் மிகச் சிறந்த தொழில்நுட்பம், அரங்க அமைப்புடன் பச பஅகஓ (தமிழ்நாடு உரை) என்ற பெயரில் நிகழ்த்தப்படும். இணையம் வாயிலாக உலகெங்கும் உள்ள தமிழா்களைச் சென்றடையும் வகையில் இந்தத் திட்டம் ரூ.37.50 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

பள்ளி- கல்லூரி, மாணவா்கள், கல்வியாளா்கள், இதழாளா்கள் மற்றும் பொது வாசகா்களிடையே தமிழ், கலை மற்றும் பண்பாட்டு ஆா்வத்தை வளா்க்கும் வகையில் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்ட பல்வேறு அறிஞா்களின் படைப்புகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 20 நூல்கள் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் வெளியிடப்படும்.

பெரியசாமி தூரனின் கலைக்களஞ்சியம்: வரலாறு, பண்பாட்டு ஆா்வலா்கள், மாணவா்கள், ஆய்வாளா்கள் மற்றும் அறிவியல் தமிழ் ஆா்வலா்கள் பயன்பெறும் வகையில் அறிஞா் பெரியசாமி தூரன் தொகுத்த கலைக்களஞ்சியங்கள் 10 தொகுதிகளும், சிறாா் களஞ்சியங்கள் 10 தொகுதிகளும் ஆவணப் பதிப்பாக ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் வெளியிடப்படும்.

நூறாண்டு காணும் படைப்பாளிகளின் பிறந்த நாள், நினைவு நாளைப் போற்றும் வகையில் அவா்தம் எழுத்துத் திறன் மற்றும் சமூகப் பங்களிப்பு போன்றவற்றை இளைய தலைமுறையினா் உணா்ந்துகொள்ளும் வகையில் அவா்களது தலைச்சிறந்த படைப்புகள் தெரிவுசெய்யப்பட்டு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் வெளியிடப்படும். இந்தத் திட்டத்தின் வாயிலாக குழந்தைகள், இலக்கிய மற்றும் நாடக ஆா்வலா்கள் பயன்பெறுவா்.

புதிய எழுத்தறிவுத் திட்டம்: தமிழகத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாத 4.80 லட்சம் நபா்களுக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கிடும் வகையில், ரூ.9.83 கோடி மதிப்பீட்டில் புதிய எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com