ஆட்சியரின் போலி உத்தரவுக் கடிதம் அனுப்பிய ஆவின் ஒப்பந்ததாரர் கைது

ஆவின் ஒப்பந்தப் பணிகள் தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியரின் கையெழுத்து, முத்திரையுடன் போலி உத்தரவுக் கடிதம் தயார் செய்து அனுப்பிய ஒப்பந்ததாரரை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வேலூர்: ஆவின் ஒப்பந்தப் பணிகள் தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியரின் கையெழுத்து, முத்திரையுடன் போலி உத்தரவுக் கடிதம் தயார் செய்து அனுப்பிய ஒப்பந்ததாரரை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். இவ்விவகாரத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், கழிஞ்சூரைச் சேர்ந்தவர் ஜெகன் என்கிற ஜெயச்சந்திரன்(35). இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் வேலூர் சத்துவாச்சாரி ஆவின் நிறுவனத்திலுள்ள பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை ஆட்கள் அளிக்கும் முகவராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், ஆவின் நிறுவனத்திலுள்ள 12 வகையான பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள்கள் அளிப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரி கடந்த 2021 டிசம்பர் 24 ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்காக, ஜெயச்சந்திரன் உள்பட பல்வேறு ஒப்பந்ததாரர்களும் விண்ணப்பித்திருந்தனர்.

அதேசமயம், வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் கையெழுத்து, முத்திரையுடன் கூடிய உத்தரவுக் கடிதம் ஆவின் பொதுமேலாளர் ரவிச்சந்திரன் மின்அஞ்சலுக்கு கடந்த மார்ச் 8 ஆம் தேதி வரப்பெற்றுள்ளது. அந்த கடிதத்தில், ஆவின் பணிகளுக்கான ஒப்பந்த நிபந்தனைகளில் பல்வேறு குளறுபடிகள் நிலவுவதாக குறிப்பிட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் கடிதம் வரப்பெற்றுள்ளது. எனவே, ஒப்பந்த நிபந்தனைகளை பரிசீலனை செய்து மீண்டும் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், அக்கடிதமானது ஆவின் நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவு மின்அஞ்சலில் இருந்தே அனுப்பப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த ஆவின் பொதுமேலாளர் இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில், ஆட்சியர் கையெழுத்து, முத்திரையுடன் வரப்பெற்ற கடிதம் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் அடிப்படையில் இந்த போலி கடிதம் விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஷ் கண்ணனுக்கு புகார் மனு அளித்திருந்தார். அதன்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் பூபதிராஜன் தலைமையில் போலீஸார் கடந்த மார்ச் 18 ஆம் தேதி 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில், ஆவின் ஒப்பந்ததாரர் ஜெயச்சந்திரன்தான் மாவட்ட ஆட்சியரின் கையெழுத்து, முத்திரை யுடன் போலியாக உத்தரவுக்கடிதம் தயார் செய்து மின்னஞ்சலில் அனுப்பியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஜெயச்சந்திரனை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், கடந்த 2014 முதல் ஆவினுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள்கள் அளித்து வரும் நிலையில், ஜெயச்சந்திரன் மீது நிர்வாகத்தில் சில அதிருப்திகளும் இருந்துள்ளன. இதனால், இம்முறை தனக்கு ஒப்பந்தம் கிடைக்க வாய்ப்பில்லை எனக்கருதிய ஜெயச்சந்திரன், ஏற்கனவே திருடி வைத்திருந்த ஆவின் நிர்வாக மின்அஞ்சல் முகவரி, கடவுச் சொல்லை பயன்படுத்தி மாவட்ட ஆட்சியர் பெயரில் போலியாக உத்தரவுக் கடிதம் தயார் செய்து தனது செல்லிடப் பேசி மூலமாகவே அனுப்பியிருப்பது தெரியவந்தது. இந்த போலி கடித விவகாரத்தில் ஆவின் நிர்வாகத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com