மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமி கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவில் 9 ஆவது நாள் விழாவாக வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க திருத்தேரோட்டம் சிறப்பாக நடைப
மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி கோயில் சித்திரை திருவிழாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருத்தேரோட்டம்
மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி கோயில் சித்திரை திருவிழாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருத்தேரோட்டம்

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவில் 9 ஆவது நாள் விழாவாக வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. 

சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்திற்கு உள்பட்ட மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவில் 8 ஆவது நாள் விழாவாக நடைபெற்ற திருக்கல்யாணத்தை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை இரவு திருக்கல்யாண மண்டகப்படிதாரர் எஸ்.பி. பொன்னம்பலம் பிள்ளை குமாரர்கள் குடும்பத்தினர் சார்பில் பூக்களாலும் மின்விளக்குகளாலும்  அமைக்கப்பட்ட பூப்பல்லக்கில் திருமணக் கோலத்தில் ஆனந்தவல்லி அம்மனும் புதிதாக உருவாக்கப்பட்ட அம்பாரியில் யானை வாகனத்தில் பிரியாவிடை சமேதமாய் சோமநாதர் சுவாமியும் எழுந்தருளி கோயிலைச் சுற்றி வீதி உலா வந்தனர். 

பெரிய தேரில் வலம் வந்த பிரியா விடை சமேத ஸ்ரீ சோமநாதர் சுவாமி

அதைத்தொடர்ந்து திருவிழாவின் 9 ஆவது நாள் நிகழ்வாக நடைபெற்ற திருத்தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலையில் பிரியாவிடை சமேதமாய் சோமநாதர் சுவாமி பெரிய தேரிலும் ஆனந்தவல்லி அம்மன் சிறிய தேரிலும் அலங்காரத்துடன் எழுந்தருளினர். 

பின்னர் சம்பிரதாய பூஜைகள் நடைபெற்று  காலை 11.10 மணிக்கு இரு தேர்களும் நிலையிலிருந்து புறப்பட்டன. திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்து வந்தனர். பெரிய தேருக்கு முன்னால் முருகன், விநாயகர் எழுந்தருளிய  சப்பரமும் பின்னால் ஆனந்தவல்லி அம்மன் தேரும் சென்றன. தாரை தப்பட்டைகள், மேளதாளங்கள், கயிலாய வாத்தியங்கள் முழங்க இளைஞர்களின் ஆட்டம் பாட்டத்துடன் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் சுவாமி தேரும் அம்மன் தேரும் ஆடி அசைந்து வந்து 11:50 மணிக்கு நிலை சேர்ந்தன. அப்போது பக்தர்கள் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர். 

சிறிய தேரில் எழுந்தருளிய ஸ்ரீஆனந்தவல்லி அம்மன்

தேரோட்ட விழாவில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். 

கடந்த இரண்டு ஆண்டுகளாக மானாமதுரை சித்திரை திருவிழா நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவின் தேரோட்டத்தைக்கான பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. மானாமதுரை போலீஸ் டி.எஸ்.பி சுந்தரமாணிக்க தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com