
மீனவர்களுக்கான நிவாரண தொகையை ரூ.10,000-ஆக உயர்த்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ராமேசுவரம்: ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஏப். 15) மீன்பிடி தடைக் காலம் தொடங்குகிறது. இதையடுத்து, அந்தந்த துறைமுகங்களில் 1800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன் இனப்பெருக்க காலமாக கருதப்படும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை சுமாா் 61 நாள்கள் விசைப்படகுகள் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடிக்க ஒவ்வொரு ஆண்டும் தடை விதிக்கப்படும். இந்த ஆண்டு இந்த தடை நேற்று முதல் தொடங்கியது.
இதையும் படிக்க- பிகார் இடைத்தேர்தல்: போச்சான் தொகுதியில் ஆர்ஜேடி வெற்றி
இதையடுத்து, ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, தொண்டி, சோழியகுடி, ஏா்வாடி உள்ளிட்ட பகுதிகளில் 1800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அந்தந்த துறைமுங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மீனவர்களுக்கான நிவாரண தொகையை ரூ.10,000-ஆக உயர்த்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பதிவில், மீன்பிடி தடைக்காலம் தொடங்கிவிட்டது. அடுத்த 61 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாது. மீனவர்களுக்கான நிவாரண தொகையை ரூ.10,000/- ஆக உயர்த்தி, தாமதமின்றி வழங்க தமிழக அரசு ஆவன செய்யவேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...