நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநர் முடிவு?

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப, தமிழக ஆளுநர் ஆர். என். ரவி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
ஆளுநா் ஆா்.என். ரவி
ஆளுநா் ஆா்.என். ரவி

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப, தமிழக ஆளுநர் ஆர். என். ரவி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக்கோரும் மசோதா கடந்த ஆண்டு செப்டம்பா் 13-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதா உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக உள்ளதாகக் குறிப்பிட்டு ஆளுநர் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார்.

ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்த தமிழக அரசு சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்டி மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும், ஆளுநர் இந்த விவகாரத்தில் காலம் தாழ்த்தக் கூடாது எனவும் தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஏற்கெனவே கடிதம் எழுதியிருந்தார். நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்துவதாகக் கூறி ஆளுநரின் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்தது.  

இந்நிலையில், வியாழக்கிழமை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் இருமுறை நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டும் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைக்காமல் இருப்பது வேதனையளிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தமிழ்நாடு மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் மாண்பினையும் கருத்தில் கொண்டு இன்று ஆளுநர் மாளிகையில் வழங்கப்படும் தேநீர் விருந்தில் கலந்துகொள்வது முறையாக இருக்காது எனவும் முதல்வர் தனது கடிதத்தில் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பான பரிசீலனை மற்றும் குறிப்பெழுதும் பணிகள் முடிந்துவிட்டதை அடுத்து, நீட் தேர்வு விலக்கு மசோதாவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்ப ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதுதொடர்பான விவரங்களை முதல்வரின் அலுவலகத்திற்கு முறைப்படி தெரிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

நீட் விலக்கு, கூட்டுறவு சங்க சட்டத்திருத்தம் உள்பட மொத்த 11 மசோதாக்கள் மற்றும் கடிதங்கள் ஆளுநர் முன் நிலுவையில் உள்ள நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்டால் தமிழக அரசுக்கும் ஆளுநருக்குமான மோதபோக்கு குறைவதற்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com