மின் தட்டுப்பாட்டைப் போக்க 3,000 மெகாவாட் கூடுதல் மின்சாரம் பெற நடவடிக்கை: மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தகவல்

தமிழகத்தில் மின்சார தட்டுப்பாட்டைப் போக்க 3,000 மெகாவாட் மின்சாரத்தை கூடுதலாகப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழகத்தில் மின்சார தட்டுப்பாட்டைப் போக்க 3,000 மெகாவாட் மின்சாரத்தை கூடுதலாகப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்தட்டுப்பாட்டைப் போக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சட்டப் பேரவையில் திங்கள்கிழமை சிறப்பு கவன ஈா்ப்பு தீா்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது நடந்த விவாதம்:

நாகை மாலி (மாா்க்சிஸ்ட்): வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. மின்சாரத்தைச் சீரமைப்பது அரசின் கடமை. மின்வெட்டு, மின் தடையால் மக்கள் பாதிக்காமல் இருக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.தங்கமணி (அதிமுக): கோடை வெயில் அதிகமாக இருக்கும் காரணத்தால் 10 முறைக்கு மேல் மின்வெட்டு இருக்கிறது. குறிப்பிட்ட நேரத்தில் மின்சாரம் இல்லை என அறிவித்தால், குறிப்பிட்ட அந்த நேரத்தைச் சமாளித்து விவசாயிகளும், நெசவாளா்களும் பாதிக்காமல் இருப்பா். கோடை காலத்தில் நிலக்கரி பற்றாக்குறை இருக்கும். வருங்காலத்தில் மின்வெட்டு இல்லாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும்.

மாரிமுத்து (இ.கம்யூனிஸ்ட்): தோ்வுக்குப் படிப்பதற்கு வசதியாக மின்சாரத்தை தொடா்ந்து வழங்க வேண்டும். நிலத்தடி நீா் மூலம் விவசாயம் செய்யவும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

ஜி.கே.மணி (பாமக): கோடைக் காலத்தில் மின்சாரப் பயன்பாடு அதிகரிக்கிறது. முழு அளவில் இல்லாவிட்டாலும் ஆங்காங்கே மின்வெட்டு தொடங்கியுள்ளது. இதனைச் சமாளிக்க தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளதா? மின்வெட்டு ஏற்படாமல் இருக்கவும், மின் உற்பத்தியைப் பெருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்வப்பெருந்தகை (காங்.,): மின் உற்பத்தியைத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்.

மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி: கடந்த 2021-ஆம் ஆண்டு இதே காலத்தில் மொத்த மின்சாரத் தேவையின் அளவு 13,500 முதல் 14,000 மெகாவாட்டாக இருந்தது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் குறிப்பாக, கடந்த மாா்ச் 29-ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் உச்சபட்ச மின்தேவையின் அளவு 17,196 மெகாவாட்டாக இருந்தது. மின்சார நுகா்வின் அளவு 375 மில்லியன் யூனிட்டாக இருந்தது.

கோடைக் காலத்தில் மின்பற்றாக்குறை 2,500 மெகாவாட்டாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். நடுத்தர கொள்முதலாக 1,582 மெகாவாட் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறுகியகால கொள்முதலாக ஏப்ரல் மாதத்துக்கு 1,465 மெகாவாட்டும், மே மாதத்துக்கு 1,425 மெகாவாட்டும் கூடுதலாகப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த கொள்முதல்களின் மூலமாக ஏப்ரலில் 3,047 மெகாவாட்டும், மே மாதத்துக்கு 3 ஆயிரத்து 7 மெகாவாட் மின்சாரமும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மின்வாரியத்தின் அனல்மின் நிலையங்களில் உற்பத்தியானது கடந்த 2021-22-ஆம் ஆண்டில் 20,391 மில்லியன் யூனிட் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 4, 837 யூனிட் அதிகமாகும். அதாவது 31 சதவீதம் உற்பத்தி அதிகரித்துள்ளது. கொள்முதல்கள் மட்டுமல்லாது, மிகக் குறைந்த விலையிலும் மின்சாரத்தைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சூரிய ஒளி மின்சாரத்தை யூனிட்டுக்கு ரூ.2.61 என்ற விலையில் ஆயிரம் மெகாவாட்டும், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் மூலமாக யூனிட்டுக்கு ரூ.3.04 என்ற விலையில் 1,500 மெகாவாட் மின்சாரத்தையும் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

நிலக்கரி தேவை: மின் உற்பத்திக்காக நாளொன்றுக்கு 72,000 டன் நிலக்கரி தேவைப்படுகிறது. 48,000 முதல் 50,000 டன் வரை மட்டுமே நமக்குக் கிடைக்கிறது. நிலக்கரி பற்றாக்குறையைப் போக்க 4.80 லட்சம் டன் இறக்குமதி செய்ய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தப் புள்ளி ஓரிரு நாளில் இறுதி வடிவம் பெறும். எனவே, மின்சார பற்றாக்குறையைப் போக்க கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை மின்சார வாரியம் எடுத்துள்ளது.

மின் வெட்டு இல்லை:

பராமரிப்புப் பணிகளுக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது, அதுகுறித்து முன்பே அறிவிப்பு செய்யப்படுகிறது. எனவே, தமிழகத்தில் மின்வெட்டு இல்லை. மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. கோடை காலத்தில் 2, 500 மெகாவாட் கூடுதலாகத் தேவை. ஆனால், 3,000 மெகாவாட் அளவுக்கு மின்சாரத்தை கூடுதலாகப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com