பதிலைக் கேட்காமலேயே போய்விட்டதுதான் வருத்தமாக இருக்கிறது: ஸ்டாலின்

எடப்பாடி பழனிசாமி, பதிலைக் கேட்காமலேயே போய்விட்டார். அதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
பதிலைக் கேட்காமலேயே போய்விட்டதுதான் வருத்தமாக இருக்கிறது: ஸ்டாலின்
பதிலைக் கேட்காமலேயே போய்விட்டதுதான் வருத்தமாக இருக்கிறது: ஸ்டாலின்

ஆளுநர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு காவல்துறையைத் தனது கையில் வைத்திருக்கக்கூடிய முதல்வர் என்ன பதில் சொல்லப்போகிறார்’ என்று சொல்லிவிட்டு, இப்போது எடப்பாடி பழனிசாமி, பதிலைக் கேட்காமலேயே போய்விட்டார். அதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஆளுநர் அவர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான விவாதம் குறித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப் பேரவையில் அளித்த பதிலில் இவ்வாறு குறிப்பிட்டார்.

முதல்வர் பேசுகையில், இன்று நேரமில்லா நேரத்தைப் பயன்படுத்தி, ஒரு முக்கியமான பிரச்சினையை எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், அதேபோல, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர், சட்டமன்ற பா.ஜ.க. தலைவர் ஆகியோர் இங்கே உரையாற்றியிருக்கிறார்கள்.

அதாவது, நேரமில்லா நேரத்தைப் பயன்படுத்தி அரசிடம் கேள்வியைக் கேட்கின்றபோது, அதற்குரிய பதிலை அவர்கள் பொறுமையாக இருந்து கேட்டு, அதிலே அவர்களுக்கு உடன்பாடு இல்லை என்று சொன்னால், வெளிநடப்பு செய்யட்டும்; நான் வேண்டாமென்று சொல்லவில்லை. அதுதான் மரபு. ஆனால், அவர்களுக்கே தெரிந்துவிட்டது. இதிலே பதில் சொல்கிறபோது, நாம் என்னென்ன செய்திருக்கிறோம் என்று சொல்வார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். அதைத்தான்  செல்வப் பெருந்தகை மிக விளக்கமாக இங்கே குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள்.

ஆளுநர் அவர்கள் தருமபுரம் ஆதீனம் அவர்களைச் சந்திக்க திருக்கடையூர் கோயிலில் இருந்து புறப்பட்டுச் சென்றபோது, அவருடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்றிருக்கக்கூடிய போராட்டத்திற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கூடுதல் டி.ஜி.பி. (சட்டம்-ஒழுங்கு) அவர்கள் நேற்றையதினம் தெளிவாக ஓர் அறிக்கையைக் கொடுத்திருக்கிறார். அதை முழுமையாக நீங்கள் பத்திரிகைகளிலே பார்த்திருக்கலாம்; தொலைக்காட்சிகளிலும் கேட்டிருக்கலாம். இருந்தாலும் காவல் துறையின் கூடுதல் இயக்குநர் முக்கியமாகக் குறிப்பிட்டிருக்கக்கூடிய ஒன்றை நான் இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

‘இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் அவர்களுடைய கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாகக் கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. காவல் துறையினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தடுப்புகள் அமைத்து, கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். பின்னர், அவர்களைக் கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். வாக்குவாதம் செய்து, பிளாஸ்டிக் பைப்புகளில் கட்டப்பட்டிருந்த கொடிகளை வீசி எறிந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை’ என்பதை காவல் துறை கூடுதல் இயக்குநர் அவர்கள் மிகத் தெளிவாக, மிக விளக்கமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

அதாவது, ஆளுநர் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்கள் கற்களோ, கொடிகளோ மற்றும் எந்தப் பொருட்களாலும் பாதிக்கப்படாமல் காவல் துறையால் பாதுகாக்கப்பட்டன என்ற செய்தியை ஆளுநர் அவர்களுடைய பாதுகாப்பு அதிகாரி, காவல்துறை இயக்குநருக்குக் கடிதம் மூலம் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.

இதை அரசியலுக்காக நாம் பயன்படுத்திட வேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள். இது அரசியல் கட்சிகளுக்கு சாதாரணமாக இருக்கக்கூடிய இயல்புதான். பொதுவாக, அ.தி.மு.க.-விலே இருக்கக்கூடிய அந்த ஒருங்கிணைப்பாளர்கள் இரண்டு பேரும் திட்டமிட்டு சேர்ந்துதான் அறிக்கை கொடுப்பார்கள்.

இங்கேயிருக்கக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆகிய இரண்டு பேரும் சேர்ந்துதான் அறிக்கை கொடுப்பார்கள். ஆனால், இந்த அறிக்கை மட்டும் தனித்தனியாக வந்தது. அப்பொழுதே நீங்கள் புரிந்து கொள்ளலாம். அதிலே குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் அவருடைய அறிக்கையிலே கடைசியாக, ‘தமிழக ஆளுநர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு காவல்துறையைத் தனது கையில் வைத்திருக்கக்கூடிய இந்த அரசினுடைய முதலமைச்சர் என்ன பதில் சொல்லப்போகிறார்’ என்று சொல்லிவிட்டு, இப்போது பதிலைக் கேட்காமலேயே போய்விட்டார். அதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது.

ஆர்ப்பாட்டத்தில் ஆளுநரின் கான்வாய் மீது கற்கள் வீசப்பட்டன; கொடிகள் வீசப்பட்டன என்பது ஓர் அபாண்டமான குற்றச்சாட்டு. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல் துறையினர் தடுப்புகள் அமைத்து, கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர் என்பதுதான் உண்மை.

ஜனநாயக ரீதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினாலும், ஆளுநர் அவர்களுடைய பாதுகாப்பில் இந்த அரசு உரிய நடவடிக்கைகளை முறையாக எடுத்திருக்கிறது. ஆளுநருக்கு உரிய பாதுகாப்பினை அளிப்பதில் இந்த அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளாது என்பதை நான் உறுதியோடு இந்த அவையிலே பதிவு செய்ய விரும்புகிறேன். 


இந்த நிகழ்வை வைத்துக்கொண்டு, ஆளுநரைப் பயன்படுத்தி அரசியல் செய்யலாம் என எதிர்க்கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் எண்ணுகிறார்கள். நான் உறுதியாகச் சொல்கிறேன், அது நடக்கவே நடக்காது, இது தி.மு.க. ஆட்சி. 

தங்கள் ஆட்சியில் ஆளுநரை கல், முட்டை, தக்காளி என வீசித் தாக்கியதை எல்லாம் மனதில் வைத்து கொண்டு, நடக்காத ஒன்றை நடந்ததாகக் கற்பனையாக இங்கே கூறி அரசியல் செய்ய வேண்டாம் என்று - இங்கேயிருந்து வெளிநடப்பு செய்திருந்தாலும், அவர்களுக்கு இந்தச் செய்தி போகும் என்ற காரணத்தினால் - எதிர்க்கட்சித் தலைவர் அவர்களையும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அவர்களையும் நான் மிகுந்த மரியாதையோடும், மதிப்போடும் கேட்டுக் கொள்கிறேன். ஆகவே, இதுகுறித்து இந்த விளக்கமே போதும் என்று கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com