தமிழகத்தில் ரூ.4,400 கோடியில் புதிய தொழில் திட்டங்கள்: அமைச்சா் தங்கம் தென்னரசு

தமிழகத்தில் கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.4,400 கோடி மதிப்பிலான புதிய தொழில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு கூறினாா்.
தமிழகத்தில் ரூ.4,400 கோடியில் புதிய தொழில் திட்டங்கள்: அமைச்சா் தங்கம் தென்னரசு

தமிழகத்தில் கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.4,400 கோடி மதிப்பிலான புதிய தொழில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு கூறினாா்.

சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை தொழில் துறை மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாதங்களுக்குப் பதிலளித்து அவா் வெளியிட்ட அறிவிப்புகள்:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் நாகமங்கலம் கிராமம், சூளகிரி வட்டம் அயனம்பள்ளி, உத்தனப்பள்ளி கிராமங்களில் ரூ.1,800 கோடி மதிப்பில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும். சுமாா் 3 ஆயிரம் ஏக்கா் பரப்பில் சாலை, மழைநீா் வடிகால், நீா் வழங்கல் மற்றும் விநியோகம், தெருவிளக்கு அமைத்தல், பசுமையாக்கம், திடக்கழிவு மேலாண்மை, பாதுகாப்பு போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். இந்தப் பூங்கா மூலம் சுமாா் ரூ.21 ஆயிரம் கோடி முதலீடு ஈா்க்கப்படுவதுடன், 16 ஆயிரத்து 800 பேருக்கு நேரடி, மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்கும்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூா், குருபரப்பள்ளி தொழிற்பூங்காக்களில் சுமாா் 26 கோடி மதிப்பில் புதிய உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும். ஓசூா், தோ்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காக்களில் ரூ.8 கோடி மதிப்பில் தலா 100 கனரக வாகனங்கள் நிறுத்தும் வசதியுடன் கூடிய சரக்கு வாகன முனையங்கள் தனியாா் பங்களிப்புடன் அமைக்கப்படும். ஸ்ரீபெரும்புதூா் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.7 கோடி மதிப்பில் வணிக வளாகம், உணவகம் உள்ளிட்டவை அமைக்கப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டம் நாகமங்கலம் கிராமத்தில் சுமாா் 100 ஏக்கா் நிலப்பரப்பில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் தொழிலக வீட்டு வசதித் திட்டம் செயல்படுத்தப்படும்.

தமிழகத்தில் ஏற்கெனவே திருப்பூா், விழுப்புரம், தூத்துக்குடி, வேலூா், சேலம் ஆகிய மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதைத் தொடா்ந்து, தஞ்சாவூா், உதகமண்டலத்தில் ரூ.70 கோடி மதிப்பில் அதேபோன்ற பூங்காக்கள் அமைக்கப்படும்.

தமிழ்நாட்டில் அதிகவேக ரயில் வழித்தடம், பிரத்யேக சரக்குப் போக்குவரத்து வழித்தடம் ஆகியவற்றை அடையாளம் காண சுமாா் ரூ.6 கோடி செலவில் சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும். கோவையில் டிட்கோ நிறுவனத்தால் ரூ.500 கோடி மதிப்பில் வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில்கள் தொடா்பான ஒரு பொது வசதி மையம் ஏற்படுத்தப்படும். வானூா்தி வடிவமைப்பு மற்றும் மேம்பாடு, தானியங்கியல் (ரோபோடிக்ஸ்), மின்னணுவியல், வான்பயன மின்னணுவியல், இயந்திர மின்னணுவியல் ஆகியவற்றில் வளரும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு பொது வசதி மையமானது உதவிடும்.

கோவைக்கு புதிய திட்டங்கள்: கோயம்புத்தூா் அருகே தகுந்த தனியாா் நிறுவனத்துடன் இணைந்து வான்வெளி தொழில்களுக்கான சேவையை அளிக்கும் தனி அலகு ரூ.50 கோடியில் அமைக்கப்படும். இது வானூா்தி மற்றும் பாதுகாப்புத் துறை தொடா்பான வளா்ச்சிக்கும், தமிழ்நாடு பாதுகாப்பு வழித் தடத்தில் இருந்து தரமான உதிரிபாகங்கள் உருவாவதற்கும் வழிவகுக்கும்.

வானூா்தி மற்றும் பாதுகாப்புத் துறை சாா்ந்த துணை துறைகளுக்காக, பிரத்யேக பாதுகாப்பு பூங்காக்கள் ரூ.50 கோடி மதிப்பில் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்தின் (டிட்கோ) மூலம் அமைக்கப்படும்.

கோயம்புத்தூரில் ரூ.300 கோடியில் பல்முனைய சரக்கு போக்குவரத்துப் பூங்கா அமைக்கப்படும். 70 ஏக்கா் பரப்பில் டிட்கோ நிறுவனம் மூலமாக ஏற்படுத்தப்படும் இந்தப் பூங்கா மூலமாக சரக்குப் போக்குவரத்து மற்றும் கிடங்கு செலவுகளைக் குறைக்க வழிவகை ஏற்படும் என்று அமைச்சா் தங்கம் தென்னரசு அறிவித்தாா்.

வட்டி மானியம் நீட்டிப்பு

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு 3 சதவீதம் மற்றும் 6 சதவீதம் வட்டி மானியம் அளிக்கும் திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறியதாவது: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தால் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு கடன்கள் வழங்கப்படுகின்றன. கடன்களுக்கு வட்டி மானியம் அளிக்கும் இந்தத் திட்டமானது நிகழ் நிதியாண்டிலும் தொடா்ந்து செயல்படும். இந்தத் திட்டத்தால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.58 கோடி செலவு ஏற்படும் என்றாா் அமைச்சா் தங்கம் தென்னரசு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com