சென்னைக்கு அருகே பிரம்மாண்ட விளையாட்டு நகரம்: ஸ்டாலினின் அதிரடி அறிவிப்புகள்

சென்னைக்கு அருகில் பிரம்மாண்டமான விளையாட்டு நகரம் அமைக்க அனைத்துவிதமான நடவடிக்கைளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னைக்கு அருகே பிரம்மாண்ட விளையாட்டு நகரம்: ஸ்டாலினின் அதிரடி அறிவிப்புகள்
சென்னைக்கு அருகே பிரம்மாண்ட விளையாட்டு நகரம்: ஸ்டாலினின் அதிரடி அறிவிப்புகள்


சென்னை: சென்னைக்கு அருகில் பிரம்மாண்டமான விளையாட்டு நகரம் அமைக்க அனைத்துவிதமான நடவடிக்கைளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், விதி 110-ன் கீழ் முதல்வர் மு.க. ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய முதல்வர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் சார்பிலான அறிவிப்புகளை இந்த மாமன்றத்திற்குத் தெரிவிக்க நான் விரும்புகிறேன். ஒரு சமுதாயத்தின் வலிமை, அச்சமுதாய மக்களுடைய மனரீதியான நலத்தையும், உடல்ரீதியான வலிமையையும் பொறுத்துள்ளது. அறிவு சக்தியைப் போன்றே, உடல் வலிமையும் ஒரு சொத்து. அத்தகைய உடல் வலிமையை அடைவதற்குப் பல்வேறு பயிற்சிகள் இருந்தாலும், விளையாட்டு என்பது அதில் மிகமிக முக்கியமானது. விளையாட்டு என்பது உடலினை உறுதி செய்கிறது;

தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் உள்ளிட்ட பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சர்வதேச அளவிலான வாகையர் போட்டிகளில் வெற்றி வாகை சூட ஏதுவாக, பல்வேறு விளையாட்டுகளுக்காக உலகத் தரத்திலான விளையாட்டுக் கட்டமைப்புகளை ஏற்படுத்த சென்னைக்கு அருகில் பிரம்மாண்டமான விளையாட்டு நகரம் அமைக்க அனைத்துவிதமான நடவடிக்கைளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம், தமிழ்நாட்டை சார்ந்த வீரர்கள் சர்வதேச தரத்திலான பயிற்சிகளை மேற்கொண்டு வெற்றி வாகை சூடுவார்கள்.

ஒலிம்பிக் போன்ற பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் வாய்ப்பை ஏற்படுத்த தமிழ்நாட்டின் நான்கு மண்டங்களில் தலா ஒன்று வீதம் நான்கு ஓலிம்பிக் அகாடமிகள் அமைக்க அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

மாநிலம் முழுவதும் விளையாட்டுப் பயிற்சிகள், அதற்கான வசதிகள் ஏற்படுத்த நினைக்கிறோம். அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும், தலா 3 கோடி ரூபாய் செலவில் சிறு விளையாட்டு அரங்கங்கள் நிறுவப்பட உள்ளன.  இதன்மூலம், ஏழை எளிய, நடுத்தரக் குடும்பங்களைச் சார்ந்த கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் வாழக்கூடிய இளைஞர்கள் பலன் பெற வழிவகை செய்யப்பட உள்ளது.

தமிழக விளையாட்டு வீரர்கள், ஒலிம்பிக் போன்ற சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வெல்வதற்கு வழிகாட்ட ஒரு முயற்சியைத் தொடங்கவிருக்கிறோம். “ஒலிம்பிக் தங்கம் தேடுதல்” என்ற திட்டம் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. 

வட சென்னை பகுதியானது பல்வேறு விளையாட்டுத் திறமையாளர்களை ஊக்குவிப்பதில் புகழ் பெற்று விளங்கி வருகிறது. அப்பகுதியில் உள்ள இளைஞர்களை ஊக்கப்படுத்தி மேம்படுத்தக்கூடிய நோக்கில், வட சென்னை பகுதியில் நவீன தொழில்நுட்பங்களோடு கூடிய நவீன குத்துச்சண்டை விளையாட்டு வளாகம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. 

இங்கு கையுந்துப்பந்து, இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கபாடி மற்றும் இதர உள்ளரங்க விளையாட்டுகளுக்கான வசதிகளோடு நவீன உடற்பயிற்சிக் கூடம்  அமைக்கப்பட உள்ளது.

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கென்றே தனியாக பிரம்மாண்டமான மைதானம் அமைக்கப்பட உள்ளது. தமிழர்களால் உருவாக்கப்பட்ட இந்தியத் தற்காப்புக் கலைகளில் ஒன்றாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய சிலம்பம் விளையாட்டினை ஊக்கப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. சிலம்ப வீரர்களுக்கு, விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்புகளில் 3 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்த முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்மூலம் தமிழ்நாட்டில் விளையாட்டைச் சார்ந்த பொருளாதாரம் உருவாகவும், அதனை மேம்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னை ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரை மீண்டும் நடத்தவும், கடற்கரை ஒலிம்பிக்ஸ் தொடரை நடத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் பல்வேறு தேசிய மற்றும் பன்னாட்டுப் போட்டிகள் நடத்துவதன்மூலம் விளையாட்டுத் துறையில் புதிய முதலீடுகளும் தொழில் வளர்ச்சியும் ஏற்படும். இதனையொட்டி சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து, தமிழ்நாட்டில் சுற்றுலாத் துறை வளர்ச்சியடைவும் வாய்ப்புகள் ஏற்படும்.  சதுரங்க விளையாட்டில் இந்தியாவின் தலைநகராக விளங்கக்கூடிய வகையில் எப்போதுமே தமிழ்நாடு பல்வேறு கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கியிருக்கிறது. அந்த வகையில் உலக அளவில் சிறந்த சதுரங்க விளையாட்டு வீரர்கள், கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட பல்வேறு கிராண்ட் மாஸ்டர்களைத் தமிழ்நாடு தொடர்ந்து உருவாக்கி வருகிறது.

இந்தியாவில் விளையாட்டு உலகின் மணிமகுடமாக விளங்கக்கூடிய 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 28-7-2022 முதல் 10-8-2022 வரை தமிழ்நாட்டில் உலகமே வியக்கக்கூடிய வகையில் பிரம்மாண்டமாகத் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட உள்ளது. 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் உலகில் உள்ள 180 நாடுகளைச் சார்ந்த சதுரங்க விளையாட்டு வீரர்கள் அதிலே பங்குபெறவிருக்கிறார்கள். 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்துவதற்கு இன்றே ஒரு குழு ஏற்படுத்தப்பட்டு, அந்தப் பணிகளும் சிறப்பாகச் செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலமாக விளையாட்டுத் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக வளர்ந்து சிறக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com