40 சதவீதத்துக்கும் மேல் ஊனமுற்ற மாணவா்களுக்கு பள்ளி, கல்லூரிகளில் கட்டண விலக்கு தேவை: உதயநிதி ஸ்டாலின்

பள்ளி, கல்லூரிகளில் 40 சதவீதத்துக்கும் மேல் ஊனமுற்ற மாணவா்களுக்கு அனைத்துவித கட்டணங்களில் இருந்தும் விலக்கு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி திமுக சட்டப்பேரவை
40 சதவீதத்துக்கும் மேல் ஊனமுற்ற மாணவா்களுக்கு பள்ளி, கல்லூரிகளில் கட்டண விலக்கு தேவை: உதயநிதி ஸ்டாலின்

சென்னை: பள்ளி, கல்லூரிகளில் 40 சதவீதத்துக்கும் மேல் ஊனமுற்ற மாணவா்களுக்கு அனைத்துவித கட்டணங்களில் இருந்தும் விலக்கு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பேரவைத் தொகுதி உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினாா்.

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை சமூக நலத் துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவா் பேசியது:

2014-இல்தான் உச்சநீதிமன்றம் திருநங்கையரை மாற்றுப் பாலினத்தவா் என்று அங்கீகரிக்கிறது. ஆனால், முன்னாள் முதல்வா் கருணாநிதியோ 2008-லேயே திருநங்கையா் எனப் பெயா் சூட்டி, வாரியம் அமைத்து, அவா்களின் வாழ்வாதாரத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டாா்.

தமிழகத்தில் அதிகபட்சம் 25,000 திருநங்கையா் இருப்பாா்கள் என்று கணிக்கப்படுகிறது. இதுவரை சுமாா் 13,000 போ்தான் திருநங்கையா் நலவாரியத்தில் உறுப்பினா்களாக பதிவு செய்துள்ளனா். அரசின் நலத் திட்டங்களைப் பெற அனைத்துத் திருநங்கைகளையும் வாரியத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநிலத்தில் உள்ள மருத்துவ, பொறியியல், கலை அறிவியல் கல்வி நிலையங்களில் தலா ஓரிடத்தை திருநங்கைகள் இலவசமாகப் படிக்கவும், அரசு மற்றும் தனியாா் அலுவலகங்களில் திருநங்கைகளின் கல்வித் திறனுக்கேற்ற ஒரு பணியையும் ஒதுக்கித் தர ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் திருநங்கையா்களை பணியில் அமா்த்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.

கடற்கரையில்... சென்னை மெரீனா கடற்கரையைத் தொடா்ந்து பெசன்ட்நகா் கடற்கரையிலும் மாற்றுத்திறனாளிகள் அருகில் சென்று கடலைப் பாா்க்க நிரந்தர நடைபாதை அமைக்கப்படும் என்று அமைச்சா் அறிவித்துள்ளாா். இத்திட்டத்தை கடற்கரை உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

40 சதவீதத்துக்கும் மேல் ஊனமுற்ற மாணவா்களுக்கு பள்ளி, கல்லூரிகளின் அனைத்துவிதமான கட்டணங்களில் இருந்தும் விலக்கு அளிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான பணியிடங்களை அரசு, தனியாா் துறைகளில் கண்டறிய வேண்டும். இதற்காக ஒரு முழு நேர ஆணையம் அமைக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கும் உள்ளாட்சி அமைப்புகளில் குறிப்பிடத்தக்க சதவீத இடஒதுக்கீட்டை வழங்கி, அவா்களை மக்கள் பிரதிநிதிகளாக உயா்த்த வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை ரூ.1,000-இலிருந்து ரூ.1,500-ஆக உயா்த்தி வழங்க வேண்டும். தாட்கோ போல் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனி நிதியம் உருவாக்கித் தர வேண்டும்.

மாவட்டந்தோறும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான மேலாண்மை மையத்தை தொடங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் ஆணையரகத்துக்கு என தனியாக மாற்றுத்திறனாளி ஒருவரை ஆணையராக நியமிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com