கருணாநிதி பிறந்தநாள் இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும்: ஸ்டாலின்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கருணாநிதி பிறந்தநாள் இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும்: ஸ்டாலின்
கருணாநிதி பிறந்தநாள் இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும்: ஸ்டாலின்

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராகவும் 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்த கருணாநிதி செய்த சாதனைகளை பட்டியலிட்டு, முதல்வர் மு.க. ஸ்டாலின் பேரவையில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதி இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதிக்கு சிலை நிறுவப்படும். அண்ணா மற்றும் பெரியார் சிலைகளுக்கு நடுவே கருணாநிதி சிலை அமைக்கப்படும்.

கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ஆம் தேதி  சிலை திறப்பு விழா நடைபெறும் என்று அறிவித்தார்.

மேலும் முதல்வரின் உரையில், 

ஐந்து முறை ஆட்சியில் இருந்த காலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவாக்கியதுதான் இன்று நாம் கண்ணுக்கு முன்னால் பார்க்கக்கூடிய நவீன தமிழகம். அன்னைத் தமிழ் மொழிக்கு செம்மொழித் தகுதி! ஒன்றிய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு உயர்வு! அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம்! மகளிருக்கும் சொத்திலே பங்குண்டு என்ற சட்டம்! பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மக்களுக்கான சமூகநீதி உரிமைகள்! உழவர்களுக்கு இலவச மின்சாரம்! கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட 7 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி! சென்னை தரமணியில் டைடல் பார்க்! சென்னைக்கு மெட்ரோ இரயில் திட்டம்! சிப்காட், சிட்கோ தொழில் வளாகங்கள் உருவாக்கம்! தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உருவாக்கியது! நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டங்கள்!

அவசர ஆம்புலன்ஸ் 108 சேவை அறிமுகம்! இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்! மினி பஸ்களைக் கொண்டு வந்தது! உழவர் சந்தைகள் அமைத்தது! கைம்பெண் மறுமண நிதி உதவி, கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவி ஆகிய திட்டங்கள்! அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு! பெண்களுக்காக 33 விழுக்காடு இடஒதுக்கீடு! இலவச எரிவாயு இணைப்புடன்கூடிய எரிவாயு அடுப்புகள் வழங்குதல்! மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைத்தல்! அனைவரும் இணைந்து வாழ தந்தைப் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்! இஸ்லாமிய சமூகத்தினருக்கு 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியது! உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலே இணைத்தது! நுழைவுத் தேர்வு இரத்து! மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கியது! சேலம் உருக்காலை, சேலம் புதிய இரயில்வே மண்டலம், நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கக்கூடிய திட்டம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம், ஆசியாவிலேயே பெரிய அண்ணா நூலகம் ஆகியவை உருவாக்கம்!

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோருக்கு மறுவாழ்வு வழங்குதல்! ஏராளமான பல்கலைக்கழகங்கள், மருத்துவக் கல்லூரிகள், கலை-அறிவியல் கல்லூரிகள் உருவாக்கியது!

இப்படி நான் சொல்லத் தொடங்கினால் இன்று முழுவதும் என்னால் சொல்லிக் கொண்டேயிருக்க முடியும். இவைதான் தமிழகத்தின் அடையாளங்கள் என்றால், அந்த அடையாளங்களை எல்லாம் உருவாக்கியவர் நம்முடைய கருணாநிதி என்று பேசினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com