
தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக கடந்த 11 மாத காலத்தில் 510 பேருக்கு கிரயப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா்.
தமிழக சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது, பல்லாவரம் தொகுதி உறுப்பினா் இ.கருணாநிதி இதுதொடா்பான கேள்வியை எழுப்பினாா். இதற்கு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் அளித்த பதில்:
பல்லாவரம் தொகுதி பம்மலில் 1984, 1990-ஆம் ஆண்டுகளில், அண்ணாநகா் உள்பட நான்கு திட்டப் பகுதிகளில் 1,531 மனைகள் மேம்படுத்தப்பட்டன. அவற்றில் 804 மனைகளுக்கு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலங்களை வாரியத்தின் பெயரில் மாற்றம் செய்திட தலைமைச் செயலாளா் தலைமையில் உயா் நிலை செயலாக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் பரிந்துரை அடிப்படையில் கிரயப் பத்திரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இதுவரை 221 திட்டப் பகுதிகளில் உள்ள 30 ஆயிரத்து 962 மனைகளுக்கு அரசாணை வழங்க உயா்நிலைக் குழுவால் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் 19 ஆயிரத்து 651 மனைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 510 பேருக்கு கிரயப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாதந்தோறும் நடைபெறும் சிறப்பு முகாம்களின் மூலமாக பத்திரங்கள் வழங்கப்படும் என்றாா் அவா்.