மத்திய நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை மாநில பல்கலை.யோடு இணைக்க வேண்டும்: கே.பாலபாரதி

காந்தி கிராம கிராமியப் பல்கலை.யில் இளங்கலைப் படிப்புகளுக்கு க்யூட் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை
மத்திய நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை மாநில பல்கலை.யோடு இணைக்க வேண்டும்: கே.பாலபாரதி

திண்டுக்கல்: காந்தி கிராம கிராமியப் பல்கலை.யில் இளங்கலைப் படிப்புகளுக்கு க்யூட் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

காந்தி கிராம கிராமியப் பல்கலை. முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் இரா.சச்சிதானந்தம் தலைமை வகித்தார். காங்கிரஸ் நிர்வாகி டி.மணிகண்டன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் கே.பாலபாரதி கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு உள்பட பல்கலை.யில் க்யூட் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கிராமப்புற ஏழை எளிய  மாணவர்கள், விவசாயக் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள் உயர்கல்விக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை தடுக்கும் நோக்கிலேயே க்யூட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை திருவாரூரில் மட்டுமே மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. திண்டுக்கல் காந்தி கிராமம், கோவை அவிநாசியில் செயல்பட்டு வரும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு, மத்திய அரசு நிதி உதவி வழங்குவதால் இங்கும் க்யூட் நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 2 பல்கலைக்கழகங்களுக்கான நிகர்நிலை தரத்தை ரத்து செய்ய வேண்டும். க்யூட் நுழைவுத் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும். க்யூட் நுழைவுத் தேர்வு நடைபெறுவதால், 13 நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும், இந்தியாவின் பிற பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும் போட்டியிடுவதால், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி வாய்ப்பு பறிபோகும். 

ஏழை மாணவர்கள் மற்றும் பெண்களுக்கான கல்வி வாய்ப்பினை பறிப்பதற்கு மத்திய அரசு முயற்ச்சித்து வருகிறது. தமிழகத்திலுள்ள 2 மத்திய நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை க்யூட் நுழைவுத் தேர்வு நடைமுறையிலிருந்து விலக்கு அளிக்கும் வகையில், தமிழகத்திலுள்ள மாநில  பல்கலைக்கழகங்களோடு இணைக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com