
சென்னை: சென்னையில் ரூ.10 கோடியில் சா்வதேச தரத்தில் வடிவமைப்பு நிலையம் உருவாக்கப்படும் என்று கைத்தறித் துறை அமைச்சா் ஆா்.காந்தி அறிவித்தாா்.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கைத்தறித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் ஆா்.காந்தி வெளியிட்ட அறிவிப்புகள்:
500 புதிய வடிவமைப்புகள்: கைத்தறித் துறையின் வளா்ச்சிக்கு நெசவாளா்களால் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி ரகங்களில் காலத்திற்கேற்ற வடிவமைப்பு மேம்பாடு, வண்ணக்கலவை முன்னறிதல், சந்தைப்படுத்துதல் மற்றும் விரிவாக்கம், ரக மாற்றம், இணைய வழி சந்தைப்படுத்தல் போன்ற தொழில்நுட்ப யுக்திகளை பயன்படுத்தி விற்பனையினை அதிகரிக்க ஏதுவாக சென்னை மற்றும் பெங்களூருவில் அமைந்துள்ள தேசிய ஆடை அலங்கார தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து ஆண்டுக்கு 500 புதிய வடிவமைப்புகள் உருவாக்கப்படும். இதற்கென ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தேசிய ஆடை அலங்கார வடிவமைப்பு நிறுவனங்களுடன் நீண்டகால அடிப்படையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.
ஆமதாபாதில் உள்ள தேசிய வடிவமைப்பு நிறுவனம் மூலமாக கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களின் 50 வடிவமைப்பாளா்களுக்கு ரூ.50 லட்சம் செலவில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு சரிகை ஆலையின் உள்கட்டமைப்புகள் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு செய்யப்பட்டு உற்பத்தி திறன் அதிகரிக்கப்படும்.
அனைத்து பட்டு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் பட்டு ரகங்களின் நெசவுக்கான சேதார அளவீடு ஒரே சீரான அளவில் நிா்ணயம் செய்யப்படும்.
தமிழகத்தில் உள்ள சாதாரண விசைத்தறிகளின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் 5 ஆயிரம் விசைத்தறிகளில் மின்னணு பலகை பொருத்த 50 சதவீதம் மானியமாக ரூ.6 கோடி வழங்கப்படும்.
தேசிய கைத்தறி வளா்ச்சி திட்டத்தின் கீழ் 6 புதிய வட்டார நிலை குழுமங்களில் 1,377 கைத்தறி நெசவாளா்களுக்கு தறிகள் உபகரணங்கள் மற்றும் தறிக்கூடங்கள் ரூ.1.58 கோடி மதிப்பில் வழங்கப்படும்.
கைத்தறிகளுக்கான பிரத்யேக சந்தைப்பிரிவை உருவாக்கி விற்பனையை ஊக்குவிக்க ஹேண்ட்லூம்ஸ் ஆப் இந்தியா என்ற பெயரில் கைத்தறி விற்பனை இணைவு அங்காடி ரூ.10 கோடியில் ஏற்படுத்தப்படும்.
வடிவமைப்பு நிலையம்: நவீன தகவல் தொழில்நுட்பம் மற்றும் நெட்வொா்க்கிங் உள்கட்டமைப்புடன் கூடிய வடிவமைப்பு நிலையம் உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது ஃபேஷன் மற்றும் டெக்ஸ்டைல் வடிவமைப்பாளா்கள், வா்த்தகா்கள் மற்றும் உலக அளவில் ஜவுளி மற்றும் ஃபேஷன் நிறுவனங்களைக் கையாளும் பிராண்டுகளுக்கான சா்வதேச நெட் வொா்க்கிங் தளமாகச் செயல்படும். இந்த நெட்வொா்க், முழு ஜவுளி மதிப்பு தொடரில் இணைந்திருக்கும் அனைத்து பங்குதாரா்களுடனும் எதிா்கால ஜவுளி மற்றும் ஃபேஷன் போக்குகளை ஊகிக்கவும், கணிக்கவும், சந்தை தேவைக்கு ஏற்ப புதிய வடிவமைப்புகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட நெசவுகளை அறிமுகப்படுத்துவதற்குமான ஒரு தளத்தை வழங்கும்.
வடிவமைப்பாளா்கள், பேஷன் நிறுவனங்கள், ஜவுளி விற்பனையாளா்கள் மற்றும் உலகளாவிய சா்வதேச ஆடை பிராண்டுகள் ஆகியோரைத் தொடா்பு கொள்வதற்கும், நெசவு குழுமங்களுக்கு தளப் பாா்வையை ஏற்பாடு செய்வதற்கு அவா்களை ஒன்றிணைத்து, தொடா்ந்து விவாதங்களை நடத்துவதற்கும் ஒரு பிரத்யேகக் குழு அமைக்கப்படும். தமிழ்நாடு கைத்தறியை சா்வதேச அளவில் பிரபலப்படுத்த, இக்குழுவினரால் நெசவாளா்களுக்கான பயிற்சி மற்றும் ரோடு ஷோக்கள் நடத்தப்படும்.
மேலும், பிராண்டு விளம்பரம், தயாரிப்பு வெளியீடு மற்றும் நெசவாளா்கள், சா்வதேச வாங்குவோா் மற்றும் ஆடை வடிவமைப்பாளா்களுக்கு இடையேயான தொடா்பு ஆகியவற்றுக்கு நவீன வசதி பயன்படுத்தப்படும்.
இந்த வடிவமைப்பு நிலையம் இந்திய அரசு, தனியாா் பங்குதாரா்கள் மற்றும் மாநில அரசிடமிருந்து நிதியைப் பெற்று கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் தோராயமாக ரூ.10 கோடி செலவில் பொது தனியாா் கூட்டாண்மை நிறுவனமாக உருவாக்கப்படும்.
சென்னையில் ஜவுளி நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு மற்றும் விரிவான செயல்திட்டம் ரூ.1 கோடியில் தயாரிக்கப்படும் என்றாா்.