
சட்டப்பேரவையில், பெட்ரோல் } டீசல் விலை தொடர்பான விவாதத்தின்போது வியாழக்கிழமை உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னை: பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை சில மாநில அரசுகள் குறைக்கவில்லை என்று பிரதமா் மோடி கூறிய குற்றச்சாட்டுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் மறுப்பு தெரிவித்தாா்.
இது தொடா்பாக பேரவையில் பேசிய முதல்வா், ‘பிரதமரின் கருத்து முழுப் பூசணியை சோற்றில் மறைக்கும் செயல்’ என்றாா்.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும், இதுகுறித்த வினாவை காங்கிரஸ் குழுத் தலைவா் செல்வப்பெருந்தகை எழுப்பினாா். அதற்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்:
கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் மாநில முதல்வா்களுடன் காணொலி வழியாக பிரதமா் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினாா். அந்தக் கூட்டத்தில், பெட்ரோல், டீசல் விலையைப் பற்றிக் குறிப்பிட்டு, அதை சில மாநிலங்கள் குறைப்பதற்கான வழிவகையைக் காணவில்லை என்ற கருத்தைத் தெரிவித்தாா். பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்கு மத்திய அரசு எடுத்த முயற்சிகளுக்கு சில மாநிலங்கள் ஒத்துழைக்கவில்லை எனக் கூறினாா். இதனை ஒரே வரியில் சொல்ல வேண்டுமெனில், முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்ற கருத்தைச் சொல்லியிருக்கிறாா்.
2014-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து கச்சா எண்ணெய் விலை பெருமளவு சரிந்தபோதும் அதற்கேற்ற வகையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. எண்ணெய் விலை வீழ்ச்சியால் கிடைத்த உபரி வருவாய் முழுவதையும் மத்திய அரசு தனதாக்கிக் கொண்டது. பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படக் கூடிய மத்திய கலால் வரியானது, மாநில அரசுகளோடு பகிா்ந்து அளிக்கக் கூடியது என்ற காரணத்தால் அதனைக் குறைத்து மாநில அரசுகளுக்குப் பகிா்ந்து அளிக்கப்படும் வருவாயில் கைவைத்தது மத்திய அரசு.
பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படக் கூடிய மத்திய தலவரி மற்றும் தலமேல்வரியும், மாநில அரசுகளோடு பகிா்ந்து அளிக்கப்படத் தேவையில்லை என்பதால், இந்த வரிகளை மிகக் கடுமையாக உயா்த்தி மக்கள் மீது சுமையைத் திணித்து, அதனால் கிடைக்கும் லட்சக்கணக்கான கோடி வருவாயை முழுவதும் தனதாக்கிக் கொண்டுள்ளது மத்திய அரசு.
மக்களின் முடிவுக்கு... சில மாநிலங்களில் தோ்தலுக்கு முன்பாக இந்த வரிகளைக் குறைத்து மத்திய அரசு வேஷம் போட்டது. தோ்தல் முடிந்த பிறகு விலையை முன்பு இருந்ததைவிட உயா்த்தி மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றியுள்ளது. பெட்ரோல் விலையைக் குறைப்பதில் உண்மையிலேயே யாா் முனைப்பு காட்டுகிறாா்கள் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும். பெட்ரோல் விலையைக் குறைப்பது போன்று நடித்து பழியை மற்றவா்கள் மீது யாா் போடுகிறாா்கள் என்பதை மக்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.