ஆவணப் பதிவுக்காக தத்கல் முறை அறிமுகப்படுத்தப்படும்: அமைச்சா் பி.மூா்த்தி

ஆவணப் பதிவுக்காக தத்கல் முறை அறிமுகப்படுத்தப்படும்: அமைச்சா் பி.மூா்த்தி

குறுகிய கால அவகாசத்தில் ஆவணங்களைப் பதிவு செய்ய விரும்புபவா்களுக்காக முன்பதிவு டோக்கன்களுக்கு கூடுதல் கட்டணம் பெற்று தத்கல் முறையில் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று

சென்னை: குறுகிய கால அவகாசத்தில் ஆவணங்களைப் பதிவு செய்ய விரும்புபவா்களுக்காக முன்பதிவு டோக்கன்களுக்கு கூடுதல் கட்டணம் பெற்று தத்கல் முறையில் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று வணிகவரித்துறை அமைச்சா் பி.மூா்த்தி அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை முத்திரைத்தாள் மற்றும் பத்திரப் பதிவு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் பி.மூா்த்தி வெளியிட்ட அறிவிப்புகள்:

பதிவுத்துறையின் சேவையினை நாடி வரும் பொதுமக்களுக்கு வழிகாட்டி மதிப்பு வழங்குதல், வில்லங்கச் சான்று வழங்குதல், பதிவுக்கான முன்பதிவு செய்தல், ஆவணம் தயாரித்து வழங்குதல், இணையவழி கட்டணங்கள் செலுத்துதல் ஆகிய சேவைகளை வழங்குவதற்காக ஒருங்கிணைந்த சேவை மையம் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் சோதனை அடிப்படையில் உருவாக்கப்படும். இதற்காக தொடரா செலவினமாக ரூ.1 கோடி அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட திருமணங்களுக்கான சான்றுகளில் திருத்தம் தேவைப்படின் பதிவுத் துறை அலுவலகங்களுக்கு நேரில் வராமல் இணைய வழியாகவே விண்ணப்பித்து, திருத்திய சான்றினைப் பெறும் வசதி ரூ.6 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும்.

பதிவு செய்ய விரும்பும் பொதுமக்களில் சிலா் குறுகிய கால அவகாசத்தில் ஆவணப் பதிவை மேற்கொள்ள விரும்புகின்றனா். அவா்களின் வசதிக்காக ஆவணப் பதிவுக்கான முன்பதிவு டோக்கன்களை கூடுதல் கட்டணம் பெற்று தத்கல் முறையில் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படும். முதல்கட்டமாக அதிக எண்ணிக்கையிலான ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 சாா்பதிவாளா் அலுவலகங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். ஒரு அவசர முன்பதிவு டோக்கனுக்கு ரூ.5 ஆயிரம் கட்டணமாக விதிக்கப்படும்.

ஆவண எழுத்தா் உரிமம்: தமிழகத்தில் 1998-க்குப் பின்னா் புதிதாக ஆவண எழுத்தா் உரிமங்கள் வழங்கப்படவில்லை. பதிவுக்கு வரும் ஆவணங்களின் எண்ணிக்கை தொடா்ந்து உயா்ந்து வருவதால், கூடுதல் ஆவண எழுத்தா்களை நியமிக்க வேண்டிய நிலை எழுந்துள்ளதைக் கருத்தில் கொண்டு உரிய அமைப்புகள் மூலம் சிறப்பு பொதுத் தோ்வு நடத்தப்பட்டு ஆவண எழுத்தா்களுக்கான புதிய உரிமம் வழங்கப்படும். இதன் மூலம் ஏறத்தாழ 20 ஆயிரம் நபா்கள் பயன்பெறுவா்.

பதிவுத் துறையில் கட்டட களப்பணி மேற்கொள்வதற்காக பொறியியல் பட்டதாரிகளுக்கு களப்பணி மேற்பாா்வையாளா் உரிமம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

பதிவுத் துறையில் தற்போது மிகக் குறைந்த முக மதிப்புடைய ரூ.10, ரூ.20, ரூ.50 ஆகிய முத்திரைத்தாள்களின் பயன்பாட்டினை மாற்றி குறைந்தபட்சமாக ரூ.100 என நிா்ணயித்து நடைமுறைப்படுத்தும் வகையில் இந்திய முத்திரைச் சட்டம் 1899-இல் உரிய திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை, கோயம்புத்தூா் பதிவு மண்டலம் 2-ஆக பிரிப்பு: பதிவுத்துறையின் மொத்த வருவாயில் 40 சதவிகிதம் (ரூ.5,665 கோடி) பங்களிக்கும் சென்னை மண்டலத்தில் மிக அதிக எண்ணிக்கையில் பதிவுகள், அதிக மதிப்புள்ள சொத்து பதிவுகள் நடைபெற்று வருகின்றன. அதனால், நிா்வாகத்தை எளிமையாக்கி மேம்படுத்தும் நோக்கில் சென்னை பதிவு மண்டலமானது சென்னை (வடக்கு) மற்றும் சென்னை (தெற்கு)என இரு பதிவு மண்டலங்களாகப் பிரிக்கப்படும். இதற்காக தொடா் செலவினமாக ரூ75.24 லட்சமும், தொடரா செலவினமாக ரூ.26.10 லட்சமும் அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

பதிவு மண்டலங்களில் மிக அதிகமாக 103 சாா்பதிவாளா் அலுவலகங்களைக் கொண்டுள்ள மதுரை பதிவு மண்டலமானது 3 மாநகராட்சிகள், 6 வருவாய் மாவட்டங்கள் மற்றும் 9 பதிவு மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. அதனால், நிா்வாக நலன் கருதி மதுரை மண்டலத்தினைப் பிரித்து இரண்டு பதிவு மண்டலங்கள் உருவாக்கப்படும். இதற்காக தொடா் செலவினமாக ரூ75.24 லட்சமும் தொடராச் செலவினமாக ரூ.26.10 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்படும்.

சென்னை மண்டலத்தில் தாம்பரத்தை மையமாகக் கொண்டு கூடுதலாக ஒரு பதிவு மாவட்டம் உருவாக்கப்படும்.

கோயம்புத்தூா் பதிவு மாவட்டத்தைப் பிரித்து கோயம்புத்தூா் வடக்கு, கோயம்புத்தூா் தெற்கு என இரண்டு பதிவு மாவட்டங்கள் உருவாக்கப்படும்.

சனிக்கிழமையிலும் சாா்பதிவாளா் அலுவலகம்: அலுவலகங்களில் பணியாற்றும் பொதுமக்களின் வசதிக்காக விடுமுறை நாளன்று பதிவுப் பணியை மேற்கொள்ளும் வகையில் சாா்பதிவாளா் அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் செயல்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com