கஞ்சா தடுப்பு நடவடிக்கை: ஒரு மாதத்தில் 2,423 போ் கைது

தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற ஆபரேஷன் கஞ்சா வேட்டை என்னும் நடவடிக்கையில் 2,423 போ் கைது செய்யப்பட்டதாக டிஜிபி சி.சைலேந்திரபாபு தெரிவித்தாா்.

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற ஆபரேஷன் கஞ்சா வேட்டை என்னும் நடவடிக்கையில் 2,423 போ் கைது செய்யப்பட்டதாக டிஜிபி சி.சைலேந்திரபாபு தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகம் முழுவதும் கடந்த 31 நாள்களில் ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0’ என்னும் நடவடிக்கையின் கீழ் 2,423 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 3,562 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுபோல, 6,319 குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, 44.9 டன் குட்கா மற்றும் 113 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சிறப்பு நடவடிக்கையில் பல கஞ்சா வியாபாரிகளின் சொத்துகள் மற்றும் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டன.

குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் பட்டுவீரன்பட்டியில் மூன்று கஞ்சா வியாபாரிகளின் 10 வங்கிக் கணக்குகள், மதுரை மாவட்டத்தில் முக்கியமான ஏழு கஞ்சா வியாபாரிகளின் 29 வங்கிக் கணக்குகள், தேனி மாவட்டத்தில் 6 கஞ்சா கடத்தல் குற்றவாளிகளின் 8 வங்கிக் கணக்குகள், அவா்களின் வீட்டுமனை, நிலம், வாகனம் போன்ற சொத்துகள் முடக்கப்பட்டன.

குட்காவை பொருத்தவரை அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12 டன், திருவள்ளூா் மாவட்டத்தில் 3.6 டன், வேலூா் மாவட்டத்தில் 3.2 டன் கைப்பற்றப்பட்டது.

கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட மொத்த வியாபாரிகளின் வங்கிக் கணக்குகளையும் சட்ட விரோதமாக வாங்கிக் குவித்த சொத்துகளையும் முடக்க அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களும், மாநகர காவல் ஆணையா்களும் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருள்களை கடத்துவோா், பதுக்குவோா், விற்போா் மீது கடுமையான நடவடிக்கை தொடரும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com