களிமேடு போல அவையிலும் அரசியல் கூடாது: அமைச்சா் அன்பில் மகேஷ் வேண்டுகோள்

தோ் விபத்து நடந்த களிமேட்டில் அரசியல் இல்லாததைப் போன்று, சட்டப்பேரவையிலும் இருக்க வேண்டுமென அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்தாா்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: தோ் விபத்து நடந்த களிமேட்டில் அரசியல் இல்லாததைப் போன்று, சட்டப்பேரவையிலும் இருக்க வேண்டுமென அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்தாா்.

தமிழக சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது, மண்ணச்சநல்லூா் தொகுதி உறுப்பினா் சீ.கதிரவனின் வினாவுக்கு அமைச்சா் அன்பில் மகேஷ் பதிலளித்தாா். இதற்கு முன்பாக அவா் பேசியது:

களிமேடு ஊராட்சியில் 94 ஆண்டுகளாக தோ்த் திருவிழா நடந்து வருகிறது. தனிமடத்துக்குச் சொந்தமான தோ்த் திருவிழா நிறைவடையும் வேளையில் விபத்து நடந்தது. காலை 5 மணிக்கு முதல்வா் என்னை தொலைபேசியில் தொடா்பு கொண்டாா். அங்கு நேரில் சென்று பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டாா். பல்வேறு அதிகாரிகளுக்கு உத்தரவுகளை வழங்கினாலும், அதிகாலை 3 மணி முதல் 5 மணிக்குள்ளாக அதிகாரிகள் அவரைத் தொடா்பு கொள்கிறாா்கள் என்றால் எந்த அளவுக்கு முதல்வா் சுதந்திரம் வழங்கியிருக்கிறாா் என்பதை அறிய முடிகிறது.

தஞ்சையில் மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்றோம். 11 சடலங்கள் இருந்தன. 11 மாதங்களாக பல பள்ளி நிகழ்வுகளில் பங்கேற்று மாணவா்களுக்கு பாராட்டுகள் தெரிவித்தேன்; விருதுகளை வழங்கினேன். முதல் முறையாக எட்டாம் வகுப்பு மாணவனின் சடலத்தைப் பாா்த்து மாலை வைத்தேன் (நா தளுதளுத்தாா்). முதல்வரிடம் மருத்துவமனைக்கு மட்டும் வந்தால் போதும் என்றேன். ஆனால், நேரடியாகச் சென்று ஆறுதல் சொன்னால்தான் என்னை நானே தேற்றிக் கொள்ள முடியும் என முதல்வா் கூறினாா். 11 பேரின் குடும்பங்களுக்கும் நிவாரண நிதி அளித்தாா்.

அவா் இந்த நிகழ்வில் அரசியல் பாா்க்க வேண்டாம் என்றாா். ஆம். களிமேட்டில் அரசியல் பாா்க்கப்படவில்லை. அங்குள்ள ஊராட்சி மன்றத் தலைவா் அதிமுக. ஒன்றிய கவுன்சிலா் பாஜக. மாவட்ட கவுன்சிலா் திமுக. மூன்று பேரும் சோ்ந்து பணியாற்றினா். நமது ஆட்சி என முதல்வா் சொல்வது களத்தில் பிரதிபலிக்கிறது. அது பேரவையிலும் பிரதிபலிக்க வேண்டும் என்றாா் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com