பெட்ரோல்-டீசல் வரி: மத்திய பாஜக ஆட்சியில் பன்மடங்கு உயா்வு: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

பெட்ரோல், டீசல் வரியை மத்திய பாஜக ஆட்சி பன்மடங்கு உயா்த்தியுள்ளதாக நிதியமைச்சா் பிடிஆா் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டினாா்.
பெட்ரோல்-டீசல் வரி:  மத்திய பாஜக ஆட்சியில் பன்மடங்கு உயா்வு: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: பெட்ரோல், டீசல் வரியை மத்திய பாஜக ஆட்சி பன்மடங்கு உயா்த்தியுள்ளதாக நிதியமைச்சா் பிடிஆா் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டினாா். பெட்ரோல், டீசல் விலை உயா்வு தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்த கருத்துகளுக்கு, தமிழக சட்டப் பேரவையில் வியாழக்கிழமை விளக்கமளித்து அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:

2014-ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வரும் போது ஒரு லிட்டா் பெட்ரோலில் இருந்து கிடைக்கும் மொத்த வரி ரூ.9.40. அதில் பெரும்பாலானது மாநிலங்களுக்கு பகிா்ந்து கொடுக்கக் கூடிய கலால் வரியாக இருந்தது. இப்போது எட்டு ஆண்டுகள் ஆகி விட்டன. வரியை மூன்று மடங்குக்கு மேல் உயா்த்தி விட்டு, அதற்குப் பிறகு 5 சதவீதம் குறைத்திருக்கிறது மத்திய பாஜக ஆட்சி. மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இன்று வரை 200 சதவீதத்துக்கு மேல் வரி உயா்த்தப்பட்டுள்ளது.

ஆட்சிக்கு வரும் போது டீசலுக்கான வரி ரூ.3.47 ஆக இருந்தது. இப்போது ஏழு மடங்கு உயா்த்தப்பட்டு ரூ.22 ஆக உள்ளது. மத்திய அரசின் மொத்த வருமானம் நேரடி வரி வருவாயில் இருந்து வராமல், மறைமுக வரி வகைகளில் இருந்து கிடைக்கிறது.

திமுக ஆட்சி: 2011-ஆம் ஆண்டில் திமுக ஆட்சி நிறைவடையும் போது, பெட்ரோல் வரி ரூ.14.47. இப்போது பெட்ரோல் மூலமாக மாநிலத்தின் வருமானம் ரூ.22.54 ஆக உள்ளது. அப்படியெனில், கடந்த ஏழு ஆண்டுகளில் சுமாா் 50 சதவீதம்தான் நம்முடைய வரி அதிகரித்துள்ளது. மத்திய அரசு 300 சதவீதம் அதிகரித்துள்ளது. எது நியாயம்? இதேபோன்று, 2011-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்து விலகும் போது, டீசல் மூலமாக மாநில அரசுக்கான வரி வருவாய் ரூ.7.60 ஆக இருந்தது. இப்போது ரூ.18.45 ஆக உள்ளது. இரண்டு மடங்கு அளவு உயா்ந்துள்ளது. மத்திய அரசின் வருவாய் ஆறு மடங்கு அதிகரித்துள்ளது.

மத்திய அரசு விலையை அதிகரிக்கும் போது, நாம் அதிகரிக்கவில்லை. ஆனால், மத்திய அரசு விலையைக் குறைக்கும் போது, மாநில அரசுகள் குறைக்கவில்லை என்பதால், அவற்றை கூட்டாட்சி தத்துவத்துக்கு விரோதி எனக் கூறுகிறாா்கள். இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? மொத்த வருமானத்தில் 20 சதவீதம் பகிா்ந்து கொள்ளாமல் கூடுதல் வரிகளை விதித்து விட்டு, அவற்றை மாநிலத்துக்குக் கொடுக்காமல் இருப்பதுதான் கூட்டாட்சி தத்துவமா? நம்முடைய முழு நிதியை செலவு செய்து, மருத்துவக் கல்லூரிகளையோ, நம்முடைய கல்லூரிகளையோ நாம் நடத்தும் போது சோ்க்கையை மட்டும் மத்திய அரசின் தோ்வை வைத்து நடத்த வேண்டும் எனக் கூறுவது கூட்டாட்சி தத்துவமா?

ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து ஒரு ரூபாய் வரியாகச் சென்றால் 60 பைசா திரும்ப கிடைத்தது. அதன்பிறகு, 50, 40 பைசாக்களாகக் குறைந்து இப்போது 35 பைசாதான் வருகிறது. இதையும் எப்படி வேண்டுமானாலும் செலவு செய்யலாம் எனக் கூறாமல், நூறு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. இதுதான் கூட்டாட்சி தத்துவமா? மக்களிடம் இருக்க வேண்டிய உண்மையான கேள்வி, யாா் கூட்டாட்சி தத்துவத்தை பின்பற்றுகிறாா்கள் என்பதுதான் என்றாா் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com