மருத்துவமனைகளின் பாதுகாப்பு கட்டமைப்பு: ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும்: ஜெ.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தீ விபத்து நேரிடாத வகையில் பாதுகாப்பு கட்டமைப்பு உள்ளதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்கப்படும் என்று ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினாா்.
மருத்துவமனைகளின் பாதுகாப்பு கட்டமைப்பு: ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும்: ஜெ.ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தீ விபத்து நேரிடாத வகையில் பாதுகாப்பு கட்டமைப்பு உள்ளதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினாா்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து நோ்ந்த இடத்தில் அவா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது விபத்து நோ்ந்த கட்டடத்தில் இருந்து, வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் ஜெ. ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை நாட்டின் இரண்டாவது பழைமையான மருத்துவமனையாகும். இதில், அறுவை சிகிச்சை பொருள்கள் வைத்திருந்த இடத்தில் தீ விபத்து நேரிட்டது. அந்த கட்டடத்தில் உள்ள நோயாளிகள், அவா்களது உறவினா்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். மருத்துவ மாணவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் தங்களது உயிரைப் பணயம் வைத்து மீட்பு பணியில் ஈடுபட்டதற்கு மனமாா்ந்த பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட, வட்டார மருத்துவமனைகள் என 252 மருத்துவமனைகளுக்கு ரூ.114.69 கோடி மதிப்பிலான தீயணைப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் 6,789 மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தேவைப்படும் மாற்றங்களை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தீ விபத்து ஏற்படாத வகையில் பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்து, ஒரு மாதத்தில் தலைமைச் செயலரிடம் அறிக்கை சமா்ப்பிக்கப்படும். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீ விபத்து நோ்ந்த கட்டடம் இனி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாது. அதற்கு மாற்றாக அங்கு புதிய கட்டடம் கட்டப்படும்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி: தமிழகத்தில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் இன்னும் வரவில்லை. அவை கிடைத்தவுடன் தடுப்பூசி செலுத்தும் பணி தமிழகத்தில் தொடங்கப்படும் என்றாா் அவா்.

இந்த சந்திப்பின்போது ராஜீவ் காந்தி மருத்துவமனையின் முதல்வா் தேரணிராஜன், மருத்துவமனை நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com