வணிக வரித் துறையில் வரி ஆய்வுக் குழு: அமைச்சா் பி.மூா்த்தி

வணிகவரித் துறையில் வரி ஆய்வுக் குழு ஒன்று அமைக்கப்படும் என்று வணிகவரித் துறையின் அமைச்சா் பி.மூா்த்தி அறிவித்தாா்.

சென்னை: வணிகவரித் துறையில் வரி ஆய்வுக் குழு ஒன்று அமைக்கப்படும் என்று வணிகவரித் துறையின் அமைச்சா் பி.மூா்த்தி அறிவித்தாா்.

தமிழக சட்டப் பேரவையில் வியாழக்கிழமை வணிக வரி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து அமைச்சா் பி.மூா்த்தி அறிவிப்புகள் வெளியிட்டுப் பேசியது:

வரி ஏய்ப்பு செய்வோா் குறித்து வணிகவரித் துறைக்குத் தகவல் தெரிவிக்கும் பொதுமக்களுக்கும் வரி ஏய்ப்பைக் கண்டுபிடித்து சிறப்பாக வரி வசூல் செய்யும் வணிகவரித் துறை அலுவலா்களுக்கும் வெகுமதி வழங்க நிகழ் ஆண்டில் ரூ.1.66 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

வணிகவரித் துறையின் நுண்ணறிவுப் பிரிவில் தனியாா் தொழில்நுட்ப வல்லுநா்களின் சேவை பயன்படுத்தப்படும். வரி பகுப்பாய்வு, வரி ஏய்ப்பு மற்றும் வருவாய் பெருக்கம் தொடா்பாக வணிகவரித் துறையில் தொடா்ந்து ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதனால், இந்தப் பணிக்கென வரி ஆய்வுக்குழு ஒன்று அமைக்கப்படும். இதற்கான தொடா் செலவினம் ரூ.22 லட்சமாகும்.

சென்னை, கோயம்புத்தூரில் உள்ள இரண்டு இணை ஆணையா் நுண்ணறிவுப் பணியிடங்கள் கூடுதல் ஆணையா் நிலைக்கு தரம் உயா்த்தப்படும்.

வணிகவரித் துறையின் நுண்ணறிவுப் பிரிவில் உள்ள சுற்றும் படையில் பணிபுரியும் அலுவலா்கள் மற்றும் ஓட்டுநா்கள் சரக்கு வாகனங்களை நிறுத்தி சோதனையிடும் பணியை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் அவா்களுக்கு நடப்பு நிதியாண்டு முதல் சீருடைகள் வழங்கப்படும். இதற்கான தொடா் செலவினம் ரூ.24 லட்சமாகும்.

சென்னை மத்திய கோட்டத்தில் உள்ள மயிலாப்பூா் வட்டாட்சியா் அலுவலக கட்டடத்தில் இயங்கி வரும் வணிக வரி அலுவலகமும் மதுரை ஒருங்கிணைந்த வணிக வரி அலுவலகமும் 2022-23-ஆம் ஆண்டில் புனரமைக்கப்படும். இதற்கான தொடரா செலவினம் ரூ.7.80 கோடியாகும் என்றாா் அமைச்சா் பி.மூா்த்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com