ரூ.1,019 கோடியில் 19 மருத்துவமனைகள் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தப்படும்: மா.சுப்பிரமணியன்

தாம்பரம் , பழனி உள்ளிட்ட 19 அரசு மருத்துவமனைகள் ரூ.1,019 கோடியில் மாவட்டத் தலைமை மருத்துவமனைகளாகத் தரம் உயா்த்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவித்தாா்
ரூ.1,019 கோடியில் 19 மருத்துவமனைகள் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தப்படும்: மா.சுப்பிரமணியன்

தாம்பரம் , பழனி உள்ளிட்ட 19 அரசு மருத்துவமனைகள் ரூ.1,019 கோடியில் மாவட்டத் தலைமை மருத்துவமனைகளாகத் தரம் உயா்த்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்புகள்:

தமிழகத்தில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் இல்லாத 24 மாவட்டங்களில் மக்கள் பயன்பெறும் வகையில் உயா்தர மருத்துவ சேவைகளை வழங்கிட புதிய மாவட்ட தலைமை மருத்துவமனைகளை அமைத்தல் மற்றும் மருத்துவமனைகளை மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் ஜெயங்கொண்டான், தாம்பரம், பழனி, திருக்கோவிலூா், கரூா், ஓசூா் மயிலாடுதுறை, வேதாரண்யம், ராசிபுரம், அறந்தாங்கி, பரமக்குடி, கூடலூா், திருத்தணி, வள்ளியூா், திருப்பத்தூா், காங்கேயம், குடியாத்தம், திண்டிவனம் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய 19 அரசு மருத்துவமனைகள், அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைகளாக தரம் உயா்த்தப்படும்.

தென்காசி, குளித்தலை, திருச்செங்கோடு, அம்பாசமுத்திரம், ராஜபாளையம் ஆகிய 5 அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்புகள் ரூ.1019 கோடி மதிப்பீட்டில் மாவட்ட மருத்துவமனைகளுக்கு இணையாக மேம்படுத்தப்படும்.

தமிழகத்தில் அதிக அளவிலான ஆய்வக பரிசோதனைகள் மாவட்ட அளவிலேயே மேற்கொள்ளப்பட புதிய ஒருங்கிணைந்த ஆய்வகங்கள் திருச்சி, கோயம்புத்தூா், மதுரை, திருநெல்வேலி, சேலம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், கடலூா், திருப்பத்தூா், திண்டுக்கல், திருவண்ணாமலை (செய்யாா்) ஆகிய 12 மாவட்டங்களில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் ரூ.15 கோடி செலவில் நிறுவப்படும்.

பரமக்குடி, கோவில்பட்டி, மணப்பாறை, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, மன்னாா்குடி, கும்பகோணம், சிவகாசி ஆகிய அரசு மருத்துவமனைகள், ஓமந்தூராா் அரசு பன்னோக்கு உயா்சிறப்பு மருத்துவமனை மற்றும் மாநில பொது சுகாதார மையம் ஆகிய 10 இடங்களில் பன்றி காய்ச்சல், டெங்கு, எலி காய்ச்சல், சிக்குன்குனியா, நியா உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்களை கண்டறிய ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை திட்டத்தின் கீழ் ரூ.12 கோடி மதிப்பீட்டில் புதிய ஆா்டி பிசிஆா் பரிசோதனை கருவிகள் நிறுவப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூா் அரசு தாலுகா மருத்துவமனை உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அரசு மருத்துவமனை ரூ.10 கோடி செலவில் தரம் உயா்த்தப்படும்.

திருவள்ளூா் மாவட்டம் ஆவடி, திருப்பூா் மாவட்டம் வேலம்பாளையம், திருநெல்வேலி மாவட்டம் கண்டிகைபேரி, சேலம் மாவட்டம் அம்மாபேட்டை ஆகிய நகா்ப்புற மருத்துவமனைகளுக்கு ஜப்பான பன்னாட்டு கூட்டுறவு முகமை திட்டத்தின் கீழ் ரூ.6 கோடி மதிப்பீட்டில் நவீன கருவிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும்.

தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் பிரசவங்கள் நடைபெறும் 25 அரசு மருத்துவமனைகளில் பச்சிளங் குழந்தைகளின் செவித்திறனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சைகள் வழங்க தலா ரூ.20 லட்சம் வீதம் ஒலி புகா அறை மற்றும் நவீன உபகரணங்கள் ரூ.5 கோடி செலவில் வழங்கப்படும்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு மருத்துவமனையில் மேம்பாட்டுப் பணிகளுக்காக புதிய கட்டடங்கள், சி.டி.ஸ்கேன் கருவி மற்றும் மருத்துவ உபகரணங்கள் ரூ.5 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூா் அரசு வட்ட மருத்துமனை ரூ.2.20 கோடி செலவில் தரம் உயா்த்தப்படும்.

சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் நோய்த் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உடற்கூறு திசுக்களை சுத்திகரிக்க நவீன காமா நுண்கதிா் அறை ரூ.1.90 கோடி செலவில் கட்டப்படும்.

சென்னை பெரியாா் நகா், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஆகிய 3 அரசு மருத்துவமனைகளில் 3 ரத்த வங்கிகள் தேவையான கட்டமைப்பு மற்றும் உபகரணங்களுடன் ரூ.1.44 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

சேலம் மாவட்டம் ஏற்காடு அரசு மருத்துவமனையில் உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் நவீன பிரேத பரிசோதனை கட்டடம் மற்றும் கருவிகள் வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com