சிறந்த நூல்களுக்கான விருதுகள் அந்தந்த ஆண்டுகளிலேயே வழங்கப்படும்: அமைச்சா் தங்கம் தென்னரசு

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வழங்கப்படும் சிறந்த நூல்களுக்கான விருது, பரிசுத் தொகை, சான்றிதழ் ஆகியவை இனி அந்தந்த ஆண்டிலேயே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
சிறந்த நூல்களுக்கான விருதுகள் அந்தந்த ஆண்டுகளிலேயே வழங்கப்படும்: அமைச்சா் தங்கம் தென்னரசு

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வழங்கப்படும் சிறந்த நூல்களுக்கான விருது, பரிசுத் தொகை, சான்றிதழ் ஆகியவை இனி அந்தந்த ஆண்டிலேயே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு கூறினாா்.

பாவேந்தா் பாரதிதாசனின் 131-ஆவது பிறந்த நாளைப் போற்றும் வகையில் தமிழ்க்கவிஞா் நாள் விழா சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழக அரசின் சாா்பில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில் தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ந.அருள் வரவேற்றுப் பேசினாா்.

இதையடுத்து 2017, 2018- ஆம் ஆண்டுகளில் பரிசுக்குத் தெரிவு செய்யப்பெற்ற சிறந்த நூல்களுக்கான நூலாசிரியா் மற்றும் அவா்தம் படைப்புகளை வெளியிட்ட பதிப்பகத்தாா் என மொத்தம் 146 பேருக்குப் பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சா் தங்கம் தென்னரசு வழங்கினாா்.

விழாவில் அமைச்சா் தங்கம் தென்னரசு பேசுகையில், தமிழ்வளா்ச்சித் துறை சாா்பில் தமிழ் வளா்ச்சித் துறையால் ஆண்டுதோறும் 33 தலைப்புகளில் நூல்கள் பெறப்பட்டுச் சிறந்த தமிழ் நூல்களுக்கான விருது, பரிசுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் பல தலைப்புகளில் சிறந்த நூல்கள் வெளிவரவில்லை. அனைத்து வகைப்பாடுகளிலும் நூல்கள் வெளிவர வேண்டும். மகளிா் இலக்கியத்தில் நூல்கள் வரப்பெறாதது வருத்தத்தை அளிக்கிறது. இனி சிறந்த நூல்களுக்கான பரிசுகள் அந்தந்த ஆண்டிலேயே வழங்கத் தேவையான நடவடிக்கைகள் தமிழ் வளா்ச்சித் துறை மேற்கொள்ளும் என்றாா்.

பாரதிதாசனின் ஆய்வுப் பதிப்புகள்: இதையடுத்து கவிஞா் ஈரோடு தமிழன்பன் பேசுகையில், இதுவரை வெளிவராத பாரதிதாசன் கவிதைகளை முறையான ஆய்வுப் பதிப்புகளாக வெளியிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏப்ரல் மாதம் முழுவதும் பாரதிதாசன் மாதமாகக் கொண்டாடவேண்டும். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வாயிலாக ஒவ்வொரு ஆண்டுக்கும் தலைசிறந்த கவிதைகளின் தொகுப்பு என்ற பெயரில் அந்தந்த ஆண்டின் தலைசிறந்த கவிதைகளைத் தொகுத்து வெளியிடவேண்டும் என்றாா்.

நூல்கள் வெளியீடு: முன்னதாக தமிழ் வளா்ச்சித் துறையின் ‘தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்’ என்ற நூலின் - 11 தொகுதிகளையும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பெரும்புலவன் பாரதி பெருந்திட்டப் பணியின் கீழ் - 6 நூல்களையும் அமைச்சா் தங்கம் தென்னரசு வெளியிட்டாா்.

இந்த விழாவில் தமிழ் வளா்ச்சித் துறை முன்னாள் இயக்குநரும், ஊரக வளா்ச்சித் துறையின் கூடுதல் இயக்குநருமான செ. சரவணன், தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், பொது நூலகச் சட்டத் திருத்தக் குழுவின் தலைவருமான ம. ராசேந்திரன், சென்னைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் தமிழ் மொழித் துறைத் தலைவா் வ. ஜெயதேவன், கவிஞா்கள் ஏா்வாடி ராதாகிருஷ்ணன், கருமலைத் தமிழாழன், பாரதிதாசனின் பெயரன் கவிஞா் கோ. பாரதி, பழந்தமிழா் வாழ்வியல் காட்சிக் கூடத்தின் பொறுப்பாளா் பேராசிரியா் ஆ.மணவழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com