நிசான் மோட்டார் நிறுவனம் தொடர்ந்து சென்னையில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

நிசான் மோட்டார் நிறுவனம் தொடர்ந்து சென்னையில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம்
அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம்

நிசான் மோட்டார் நிறுவனம் தொடர்ந்து சென்னையில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு தளர்வில்லா ஊக்கத்தோடு செயல்படுவதனால்தான் முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கி மாநிலப் பொருளாதாரத்தை வலுவடையச் செய்துள்ளது என்று ஒரு பக்கம் தொழில் துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிட்டிருந்தாலும், மறுபக்கம் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தொழிற்சாலைகளை மூடுகின்ற துர்ப்பாக்கியமான நிலை தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு நிறுவனம், விற்பனை பாதிப்பு மற்றும் தொடர் இழப்பு காரணமாக சென்னை மறைமலைநகரில் உள்ள தொழிற்சாலையை மூடுவதாக அறிவித்தபோது, ஃபோர்டு நிறுவன நிர்வாகிகளிடமும், தொழிலாளர்களிடமும் அரசு பேச்சுவார்த்தை நடத்தி அந்த நிறுவனம் தொடர்ந்து இயங்கவும், தொழிலாளர்களின் வேலையிழப்பினை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் நான் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன். இருப்பினும், தமிழ்நாடு அரசு சார்பில் முனைப்பான நடவடிக்கைகள் எடுக்காததன் காரணமாக அந்த நிறுவனம் மூடப்படும் தருவாயில் உள்ளது.
இந்த நிலையில், ஜப்பான் நாட்டின் நிசான் மோட்டார் நிறுவனத்தின் துணை நிறுவனமான நிசான் மோட்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஒரகடத்தில் டாட்சன் வகை கார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்த நிலையில், மந்தமான கார் விற்பனை காரணமாக, தற்போது அதன் உற்பத்தியை நிறுத்தப் போவதாகவும், இருப்பில் உள்ள வாகனங்களை மட்டும் விற்பனை செய்யப் போவதாகவும், ஏற்கெனவே உள்ள வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் தொடர்ந்து கிடைக்கவும், விற்பனைக்கு பிந்தைய சேவைகள் அளிக்கப்படும் என்றும், நிறுவனத்தின் சார்பில் அளிக்கப்பட்ட உத்தரவாதம், அதாவது warranty பூர்த்தி செய்யப்படும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.

மேற்படி நிறுவனம் மூடப்படும் பட்சத்தில், நேரடியாகவும், மறைமுகமாகவும் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் அரசுக்கு வரும் வருவாயும் வெகுவாக குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. டாட்சன் வாகனத்திற்கான உதிரி பாகங்கள் விற்பனை மூலம் வரும் வருமானம் மட்டுமே அரசுக்கு கிடைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும். கடந்த ஓராண்டில் இரண்டு பெரிய கார் தயாரிக்கும் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன என்பது வேதனையான ஒன்று என்பதோடு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கும். இவ்வாறு நிறுவனங்கள் மூடப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு. இதைத் தான் இந்த நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தொழில்கள் வளர வேண்டும், தொழிலாளர்கள் வாழ வேண்டும் என்ற அடிப்படையில், இந்தப் பிரச்னையில் முதல்வர் உடனடியாக தலையிட்டு,
நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, நிசான் மோட்டார் நிறுவனம் தொடர்ந்து சென்னையில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com