மே நாள்: தலைவர்கள் வாழ்த்து

மே 1ஆம் நாளையொட்டி தொழிலாளர்களுக்கு அரசியல் தலைவர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 
மே நாள்: தலைவர்கள் வாழ்த்து

மே 1ஆம் நாளையொட்டி தொழிலாளர்களுக்கு அரசியல் தலைவர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

ராமதாஸ்: உலகத் தொழிலாளர்கள் உரிமைகளை வென்றெடுத்ததன் அடையாளமாக பிரகடனப்படுத்தப்பட்ட மே நாளை கொண்டாடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பாட்டாளிகள் இல்லாவிட்டால் இந்த உலகம், இந்த மாநிலம் இயங்காது. உலகை இயக்கும் பாட்டாளிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக சுழல்வதை உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் உலகத்திற்கு, மாநிலத்திற்கு உள்ளது. அதை மதித்து பாட்டாளிகளுக்கு நியாயமாக வழங்கப்பட வேண்டிய உரிமைகளும், அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும். அவை அனைத்தையும் வென்றெடுக்க இந்நாளில் உறுதியேற்போம்.

வைகோ: மே 1. தொழிலாளர்களின் உரிமைத் திருநாளாக, உலகம் முழுமையும் தொழிலாளர் சமூகம் கொண்டாடி மகிழ்கின்றது. நான் அமெரிக்கா சென்று இருந்தபோது, வைக்கோல் சந்தை சதுக்கத்திற்குச் சென்று, தூக்கில் இடப்பட்ட தொழிலாளத் தோழர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தி இருக்கின்றேன். 1990 ஆம் ஆண்டு, மே நாளை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலங்கள் அவையில் முன்வைத்துப் பேசினேன். அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் சென்று, பிரதமர் வி.பி.சிங் அவர்களைச் சந்தித்து, கோரிக்கையை வலியுறுத்தினோம். அதை அவர் ஏற்றுக்கொண்டு, மே நாளை, அனைத்து இந்திய அளவில் அரசு விடுமுறை நாளாக அறிவித்தார். அந்த நாளைக் கொண்டாடுகின்ற தொழிலாளர்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கே.பாலகிருஷ்ணன்: தொழிலாளர் உரிமைச் சட்டங்களை மறுக்கவும், விவசாயிகள் விரோதச் சட்டங்களை இயற்றவும், அரசியலமைப்பு சட்டத்தின் அடித்தளத்தை தகர்த்து ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கவும், மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கவும் மோடி அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கல்வி, வேலை, பெண்களின் பாதுகாப்பு, சமூக ஒடுக்குமுறை அனைத்திலும் அக்கறையற்ற அரசாக மோடி அரசு செயல்படுகிறது. தொழிலாளர் - விவசாயிகள் உள்ளிட்ட பாட்டாளி வர்க்கத்தின் நலன்களை பாதுகாப்பதற்கு மோடி அரசை தனிமைப்படுத்தி வீழ்த்துவது ஒன்றே சரியான அரசியல் இலக்கு. இதற்கு இந்தியாவிலும், தமிழகத்திலும் அரசியல், சமூக, பொருளாதாரத் தளங்களில் தொழிலாளர் வர்க்கம் ஒன்றுபட்ட போராட்ட இயக்கங்கள் வலுப்பட வேண்டும். தோழர் சிங்காரவேலர் ஏற்றி வைத்த செங்கொடி வழிகாட்டும் ஒளிவிளக்காக பட்டொளி வீசிப் பிரகாசிக்கட்டும். மே தினம் வெல்லட்டும்.

ஜி.கே.வாசன்: தொழிலாளர்களின் உரிமையையும் கோரிக்கையையும் நிறைவேற்றகோரி போராட்டம் மூலம் உலகம் முழுவதும் ஒன்றினைந்த நாள் “மே” மாதம் முதல் நாள். இதையே உலக தொழிலாளர் தினமாகவும் மே தினமாகவும் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தொழிலாளர்களின் உழைப்பிற்கு உரிய அங்கிகாரம் அளிக்கும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் மக்களின் முன்னேற்றதிற்கும் அயராது பாடுப்படும் ஒவ்வொரு
தொழிலாளர்களின் குடும்பங்களின் வாழ்வு செழிக்க உயர தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக வாழ்த்துகிறேன்.
  
ஈ.ஆர்.ஈஸ்வரன்: கரோனா போன்ற எப்படிப்பட்ட பேரிடர் வந்தாலும் அதனால் ஏற்படுகின்ற பொருளாதார சிக்கல்களில் இருந்து நாட்டை மீட்டெடுப்பது விவசாயிகளும், தொழிலாளர்களும். தொழிலாளர்களுடைய கடுமையான உழைப்பு தான் மத்திய, மாநில அரசுகளுக்கு வருமானத்தை இன்றைக்கு ஈட்டியிருக்கின்றது. அதன் மூலமாகத்தான் அரசுகள் தொய்வில்லாமல் நடைபெறுகின்றன. தொழிலாளர்களை ஊக்குவிப்பதும், அவர்தம் குடும்பங்களை கவனம் செலுத்தி பாதுகாப்பதும் தான் நாம் அவர்களுக்கு செலுத்துகின்ற நன்றி கடன். இந்த உழைப்பாளர் தினத்தில் நாட்டை முன்னேற்றப்பாதையில் தோள்கொடுத்து தூக்கி நிறுத்துகின்ற உழைப்பாளர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்.

தி.வேல்முருகன்: உழைக்கும் தொழிலாளர்களுக்கு எட்டு மணிநேர வேலை, வேலைக்கேற்ற ஊதியம் முதலானவற்றைச் சட்டபூர்வமாக உலக அரங்கில் உறுதி செய்த இந்த நன்னாளில் தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்துகளை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

சரத்குமார்: “உழைப்பவரே உயர்ந்தவர்” என்ற தாரக மந்திரத்தை கொண்டு, உழைக்கும் வர்க்கம் சீரோடும், சிறப்போடும், செழிப்போடும் வாழ்வில் தாமும் உயர்ந்து, நாட்டையும் மென்மேலும் உயர்த்த வேண்டும் என வாழ்த்தி, உழைக்கும் வர்க்கத் தோழர்களுக்கு என் சார்பிலும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பிலும் இனிய மே நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com