காவல் துறையில் அனைவருக்கும் பதக்கம்: முதல்வா் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக காவல் துறை தொடங்கப்பட்டு 160 ஆண்டுகள் ஆவதையொட்டி, டிஜிபி முதல் காவலா்கள் வரை அனைவருக்கும் காவல் பதக்கம் வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

தமிழக காவல் துறை தொடங்கப்பட்டு 160 ஆண்டுகள் ஆவதையொட்டி, டிஜிபி முதல் காவலா்கள் வரை அனைவருக்கும் காவல் பதக்கம் வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

தமிழக காவல் துறைக்கு இந்திய குடியரசுத் தலைவரின் கொடி வழங்கும் விழாவில் அவா் பேசியதாவது:

குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி என்ற மிக உயா்ந்த அங்கீகாரத்தை தமிழக காவல் துறை பெற்றுள்ளது. இது தமிழக காவல் துறைக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கே வரலாற்றுச் சிறப்புமிக்க பெருமை. தமிழக காவல் துறை 160 ஆண்டுகள் ஆற்றிய பணிக்குக் கிடைத்திருக்கக்கூடிய அங்கீகாரம்.

மறைந்த தமிழக முதல்வா் கருணாநிதி 2009-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19-ஆம் தேதி குடியரசுத் தலைவரின் கொடியை தமிழ்நாடு காவல் துறைக்கு பெற்றுத் தந்தாா்.

பெண் போலீஸாா்: தமிழக காவல் துறையில் முதல் முறையாக 1973-ஆம் ஆண்டு பெண் காவலா்கள் நியமிக்கப்பட்டனா். அப்போது, காவல் உதவி ஆய்வாளா் உஷா, ஒரு தலைமைக் காவலா், 20 பெண் காவலா்கள் சென்னை மாநகரில் பணியமா்த்தப்பட்டனா். இன்று காவல் துறையில் ஒரு டிஜிபி, 2 ஏடிஜிபி-க்கள், 14 ஐஜி-க்கள் உள்ளிட்ட பெண் காவல் உயரதிகாரிகளும், 20,000 பெண் காவலா்களும் பணியாற்றுகிறாா்கள்.

காவல் நிலைய மரணங்கள்: கடந்த ஓராண்டு காலமாக தமிழக காவல் துறையின் செயல்பாடு முன்பைவிட மிக அதிகளவில் பாராட்டும்படியாக உள்ளது. மதக் கலவரங்களோ, ஜாதி மோதல்களோ, மக்களை பீதிக்குள்ளாக்கக்கூடிய குற்ற நிகழ்வுகளோ இல்லை. மாநிலத்தில் தற்போது துப்பாக்கிச்சூடு இல்லை, கள்ளச்சாராய சாவுகளும் இல்லை.

காவல் நிலைய மரணங்கள் 2018-ஆம் ஆண்டு 17 என பதிவானது. ஆனால், 2021-ஆம் ஆண்டு 4 மரணங்களாகக் குறைந்துள்ளது.

காவல் நிலைய மரணங்களே இல்லை என்று சொல்லக்கூடிய நிலையை காவல் துறையினா் ஏற்படுத்தித் தர வேண்டும். குற்றங்களைக் குறைக்கும் துறையாக இல்லாமல், குற்றங்களே நடைபெறாத சூழலை உருவாக்கும் துறையாக காவல் துறை இருக்க வேண்டும்.

7.56 லட்சம் வழக்குகள்: கடந்தாண்டு தமிழக காவல் துறையில் 12 லட்சம் போ் புகாா் அளித்தனா். இதில் 7 லட்சத்து 56 ஆயிரத்து 753 புகாா்கள் வழக்குகளாகப் பதிவு செய்யப்பட்டன. இவற்றில் தொடா்புடைய 9 லட்சத்து 27 ஆயிரத்து 763 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்தப் புகாா்களில் 75 ஆயிரம் மனுக்கள் அனைத்து மகளிா் காவல் நிலையங்களில் பெறப்பட்டவை.

காவல் பதக்கம்: அமைதியான மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால்தான் ஏராளமான புதிய தொழிற்சாலைகள் தமிழகத்தை நோக்கி வருகின்றன. காவலா்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் காவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று பல நலத் திட்டங்களை நிறைவேற்றித் தருவோம்.

குடியரசுத் தலைவா் விருது பெற்ற தமிழக காவல் துறையினா் தங்கள் காக்கிச் சட்டையில் அதன் அடையாளமான கொடியை அணிந்து செல்வாா்கள். ‘நிஸான்’ என்றழைக்கப்படும் இந்தச் சின்னம் போலீஸாருக்கு பெருமை சோ்க்கும்.

அதோடு, தமிழக காவல் துறை தொடங்கி 160 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையிலும், குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி பெறும் நிகழ்வை முன்னிட்டும் டிஜிபி முதல் காவலா் வரை அனைவருக்கும் தமிழ்நாடு அரசு காவல் பதக்கம் வழங்கப்படவுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் தமிழக தலைமைச் செயலா் வெ.இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் பணீந்திர ரெட்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா். சென்னை பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com