கனியாமூர் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

கனியாமூர் பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையை விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. 
கனியாமூர் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

விழுப்புரம்: கனியாமூர் பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையை விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு படித்து வந்த, கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த 13-ஆம் தேதி பள்ளியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தாய் செல்வி அளித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், பள்ளியைக் கண்டித்து நடைபெற்ற போராட்டம் கலவரமானது.

இதன்பிறகு மாணவியின் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சிபிசிஐடி எஸ்.பி. ஜியாவுல்ஹக் தலைமையில் கூடுதல் எஸ்பி கோமதி உள்ளிட்ட போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியர் ஹரிப்பிரியா, கணித ஆசிரியர் கிருத்திகா உள்ளிட்ட 5 பேரையும் போலீஸார் கைது செய்து, சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பின்னர் பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரையும் சிபிசிஐடி போலீஸார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

இந்த நிலையில் மாணவி மர்மமாக உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் உள்பட 5 பேரும் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு கடந்த 19-ஆம் தேதி மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி(பொ) சாந்தி முன்பு வெள்ளிக்கிழமை(ஜூலை 29 ஆம் தேதி) விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கில் சின்னசேலம் போலீஸ் முதல் தகவல் அறிக்கை பதிவின் (எஃப்.ஐ.ஆர்)  அடிப்படையில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு சிபிசிஐடி போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். ஆகவே, சிபிசிஐடி போலீஸார் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு (ஆக.1) ஒத்தி வைத்துக்கப்பட்டது.

மீண்டும் ஒத்திவைப்பு

இந்நிலையில் மீண்டும் திங்கள்கிழமை இந்த மனு நீதிபதி சாந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி தரப்பில் பழைய முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் ஜாமீன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதற்கு சிபிசிஐடி தரப்பில் போலீஸார் எதிர்ப்பு தெரிவித்தனர்.

'இந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. குறிப்பாக முதல் மற்றும், இரண்டு உடற்கூறு ஆய்வு முடிவுகள் ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டும்' என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்த அறிக்கைகள் ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பப்படவில்லை. ஆகவே, இந்த வழக்கு விசாரணை தொய்வின்றி நடைபெற எதிரிகளுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிடப்பட்டது.

இதனையடுத்து, இந்த மனு மீதான விசாரணையை வரும் 10 - ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி(பொ) சாந்தி உத்தரவிட்டார்.

ஸ்ரீமதி தாய் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்:

உயிரிழந்த ஸ்ரீமதியின் தாய் செல்வி தரப்பில் வழக்கறிஞர் காசி விசுவநாதன் விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை திங்கள்கிழமை தாக்கல் செய்தார். அந்த மனுவில் தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதால் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எதிரிகள் 5 பேருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை நீதிபதி சாந்தி ஏற்று 5 பேரின் ஜாமீன் மனுக்களையும் வருகிற 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com