மீனவர்களின் பாதுகாப்பில் அலட்சியமா? அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதிலடி

மீனவர்களின் பாதுகாப்பில் அலட்சியப் போக்கோடு நடந்து கொள்வதாக தமிழக அரசு  மீது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறும் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்


மீனவர்களின் பாதுகாப்பில் அலட்சியப் போக்கோடு நடந்து கொள்வதாக தமிழக அரசு  மீது அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறும் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார்.

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் வானிலை எச்சரிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து  மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 01.08.2022 அன்று காலை 05:30 மணிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மூலமாக வானிலை எச்சரிக்கையில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் குமரி கடல், மன்னார் வளைகுடா, தெற்கு தமிழ்நாடு கடற்கரையோரங்கள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் சுழல் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்காணும் பகுதிகளில் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தகவல் பெறப்பட்டது. இவ்வானிலை எச்சரிக்கை தகவல் உடனடியாக கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களிலுள்ள அனைத்து கடலோர கிராமங்கள் மற்றும் மீனவ சங்கங்களுக்கு அறிவிக்கப்பட்டு, 01.08.2022 முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடி தொழிலுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வானிலை எச்சரிக்கை பெறுவதற்கு முன்பே 01.08.2022 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் 1905 நாட்டுப் படகுகள் மற்றும் 120 விசைப்படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன இவற்றில் 1825 நாட்டுப்படகுகள் கரை திரும்பின. மீதமுள்ள படகுகள் கடலுக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தன. 

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் அமலிநகர் மீனவ கிராமத்திலிருந்து நாட்டுப்படகில் 4 மீனவர்களுடன் 01.08.2022 அதிகாலை 02 மணி அளவில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாட்டுப்படகு எதிர்பாராத விதமாக ராட்சத அலையில் சிக்கி விபத்துக்குள்ளானது, அப்போது அவ்வழியே வந்த சக மீனவர்கள் கடலில் தத்தளித்த இருவரை மீட்டு பத்திரமாக கரைக்கு கொண்டு வந்து சேர்த்தார்கள். இவ்விவரம் 01.08.2022 மாலை தெரிய வந்ததை அடுத்து காணாமல் போன 2 மீனவர்களை மீட்பதற்கு போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கை மேற்கொண்டு கடலோர காவல்படை மூலமும் உள்ளூர் மீனவர்களை கொண்டும் உடனடியாக காணாமல் போன மீனவர்களை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது.

02.08.2022 அன்று கடலோர காவல்படையின் 2 ரோந்துக் கப்பல் (ஐசிஜி அவிராஜ், ஐசிஜி ஆதேஸ்), 1 ட்ரோனியர் விமானம் மற்றும் இந்திய விமானப்படையின் 1 ஹெலிகாப்டர் ஆகியவை தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மீனவர்கள் காணாமல் போன விபரம் அறிந்தவுடன் நான் நேற்று (02.08.2022) அமலிபுரம் சென்று மீட்பு பணிகளை நேரில் ஆய்வு செய்து துரிதப்படுத்தினேன். மேலும் காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதலும் தெரிவித்தேன்.

02.08.2022 அன்று காலை பெறப்பட்ட சென்னை வானிலை மைய வானிலை எச்சரிக்கை செய்தியின்படி குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல், கேரளா , கர்நாடகா, இலட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்ற தகவல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவ கிராமங்களுக்கும் / மீனவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.

மேற்கு கடற்கரை மீன்பிடி தடைக்காலம் 31.07.2022 அன்று முடிவடைந்ததை அடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில மீன்பிடி விசைப்படகுகள் 01.08.2022 அன்று மீன்பிடி பிடி தொழிலுக்கு சென்ற நிலையில், வானிலை எச்சரிக்கை துறை மூலம் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பல படகுகள் 01.08.2022 அன்று‌ மாலை பாதுகாப்பாக கரை திரும்பின. மேலும், 02.08.2022 அன்று இரவு 19 விசைப்படகுகள் கரை திரும்பினர்.

இன்றைய நிலவரப்படி கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து எந்த விசைப்படகும் மீன்பிடிப்பில் இல்லை. தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மீனவர்களின் பாதுகாப்பில் மிகுந்த அக்கரையுடன் செயல்பட்டு வருகிறது.

நிலைமை இவ்வாறு இருக்க எதிர்கட்சித் தலைவர்  எடப்பாடி கே பழனிசாமி உண்மை நிலை அறியாமல் உள்நோக்கத்துடன் செய்தி வெளியிட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com