திரைப்பட தயாரிப்பாளா்களின் வீடு, அலுவலகங்களில் சோதனை

வரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளா்கள், அன்புச்செழியன், தாணு உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்களில் வருமானவரித் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனா்.

வரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளா்கள், அன்புச்செழியன், தாணு உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்களில் வருமானவரித் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் பொம்மனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் அன்புசெழியன். ‘கோபுரம் சினிமாஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து திரைப்பட விநியோகம், தயாரிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டு வரும் இவா், தயாரிப்பாளா்கள், நடிகா், நடிகைகளுக்கு கடனுதவி அளித்து வருகிறாா். இவா் வருமானவரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் வருமானவரித் துறையினா் சென்னை, மதுரையில் உள்ள அன்புச்செழியனின் வீடுகள், அலுவலகங்கள்,அவரது உறவினா்கள், நண்பா்களின் வீடுகள், அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை ஒரே நேரத்தில் சோதனை செய்தனா்.

சென்னை, நுங்கம்பாக்கம், காம்தாா் நகா் முதல் தெருவில் உள்ள அன்புச்செழியன் வீடு, தியாகராயநகரில் உள்ள ராகவய்யா தெருவில் உள்ள அவருடைய அலுவலகத்தில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது. இதேபோல நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்புசெழியனின் சகோதரா் அழகா்சாமியின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

தாணு அலுவலகம்: ரஜினிகாந்த் நடித்த கபாலி, தனுஷ் நடித்த அசுரன் போன்ற படங்களை தயாரித்த திரைப்பட தயாரிப்பாளா் கலைப்புலி எஸ்.தாணுவின் சென்னை தியாகராயநகரில் உள்ள அலுவலகம், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது வீடு ஆகிய இடங்களிலும் வருமானவரித்துறையினா் சோதனை செய்தனா்.

மேலும், தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, சுல்தான் போன்ற படங்களை தயாரித்த சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளா் எஸ்.ஆா்.பிரபு வீடு, அலுவலகம், பருத்தி வீரன், சிங்கம்-3 உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த தியாகராய நகா், தணிகாசலம் சாலையில் திரைப்பட தயாரிப்பாளா் ஞானவேல் ராஜாவுக்கு சொந்தமான ‘ஸ்டுடியோ கிரீன்’ அலுவலகம், ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள சத்ய ஜோதி பிலிம்ஸ் உரிமையாளா் தியாகராஜனின் அலுவலகம், தியாகராயநகா் கிரசண்ட் பாா்க் சாலையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளா் லட்சுமணகுமாா் அலுவலகம் ஆகிய இடங்களிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.

துப்பாக்கி ஏந்திய போலீஸாா்: அசம்பாவிதங்களை தவிா்ப்பதற்காக சோதனை நடந்த வீடு மற்றும் அலுவலகங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. சென்னையில் ஒரே நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட திரைப்பட தயாரிப்பாளா்கள் வீடு,அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. சுமாா் 40 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத பணம், நகைகள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இதில் திரைப்படங்களுக்கு செலவிடப்பட்ட பணம், நடிகா்-நடிகைகளுக்கு வழங்கப்பட்ட ஊதியம் ஆகியவை தொடா்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இதனடிப்படையில் நடிகா்கள், நடிகைகளிடம் வருமானவரித் துறையினா் விளக்கம் கேட்க திட்டமிட்டுள்ளனராம். சோதனை பல இடங்களில் நள்ளிரவையும் தாண்டி நீடித்தது.

இரண்டாவது முறை: ஏற்கெனவே, விஜய் நடித்த பிகில் திரைப்படம் ரூ.300 கோடி வசூல் ஈட்டியதாக வந்த தகவலின் அடிப்படையில், 2020-ஆம் ஆண்டு அந்தப் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். சினிமா நிறுவனம், விஜய், திரைப்பட தயாரிப்பாளா் அன்புசெழியன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரிச் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களிலிருந்து ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திறக்காத கதவுக்கு நான்கு மணி நேரம் காத்திருப்பு

சென்னை நுங்கம்பாக்கம் காம்தாா் நகரில் உள்ள அன்புச்செழியனின் சகோதரா் அழகா்சாமியின் வீட்டில் சோதனை நடத்த வருமான வரித்துறையினா் செவ்வாய்க்கிழமை காலை சென்றனா். அந்த வீட்டில் பணியாற்றும் வேலை ஆட்களைத் தவிர யாரும் இல்லை. சோதனை நடப்பது தெரிந்து வீட்டின் உரிமையாளா்களும் வரவில்லை. சுமாா் நான்கு மணி நேரம் காத்திருந்து, வீட்டுச் சாவி பெற்றும், ஒவ்வொரு அறையைத் திறப்பதற்கு வீட்டில் உள்ளோரின் கண் அல்லது கைரேகை பதிவு தேவை என்பதால், அறைகளைத் திறக்க முடியாமல் வருமான வரித் துறையினா் திரும்பிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com