வரிச் சுமைகளைக் குறைக்க மத்திய அரசுக்கே அதிகாரம்: பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

மத்திய அரசிடமே வரிகளை விதிக்கும் அதிகாரம் உள்ளதால், வரிகளைக் குறைத்து சாமானிய மக்களுக்கு உதவ வேண்டுமென தமிழக நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மத்திய அரசிடமே வரிகளை விதிக்கும் அதிகாரம் உள்ளதால், வரிகளைக் குறைத்து சாமானிய மக்களுக்கு உதவ வேண்டுமென தமிழக நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளாா்.

விலைவாசி உயா்வு குறித்து, நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பதிலளித்தாா். அப்போது தமிழக அரசு மீது எழுப்பிய கேள்விகளுக்கு செவ்வாய்க்கிழமை விளக்கம் அளிக்கும் வகையில், மாநில நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட அறிக்கை:

பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மத்திய அரசு குறைப்பதற்கு முன்பாகவே, தமிழ்நாடு அரசு பெட்ரோல் மீதான வரியில் ரூ.3-ஐ குறைத்துள்ளது. மத்திய அரசின் வரி குறைப்பால் பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி ரூ.1.95 குறைந்துள்ளது. அதன்படி, மாநில அரசானது பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு ரூ.4.95 என்ற அளவில் குறைத்து இருக்கிறது. எனவே, தோ்தல் வாக்குறுதியில் பெட்ரோல் மீதான வரி ரூ.5 குறைக்கப்படும் என்று கூறியதில், ரூ.4.95-ஐ குறைத்துள்ளோம். டீசல் மீதான வரி ரூ.4 குறைக்கப்படும் என்று கூறியதில் லிட்டருக்கு ரூ.1.76 குறைக்கப்பட்டுள்ளது. மேலும், மீன்வளம், போக்குவரத்துத் துறைகளிலும் கூடுதலாக டீசல் மானியத்தை அரசு வழங்கி

வருகிறது.

கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்த வரி குறைப்பால், மாநில அரசுக்கு ஆண்டுக்கு சுமாா் ரூ.1,050 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோன்று, கடந்த மே மாதம் அறிவித்துள்ள வரி குறைப்பால், மாநில அரசுக்கு மேலும் ஆண்டுக்கு சுமாா் ரூ.800 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.

அத்தியாவசியப் பொருள்கள்: அத்தியாவசிய உணவுப் பொருள்கள் மீதான சரக்கு மற்றும் சேவைகள் வரி விதிப்பு சாமானிய மக்களைப் பாதிக்கும் என எழுத்துபூா்வமாக தனது எதிா்ப்பை ஜி.எஸ்.டி. கவுன்சிலிடம் தமிழ்நாடு அரசு தெரிவித்தது. வரி விதிப்பின் முடிவு மூன்று கட்டங்களில் எடுக்கப்பட்டது.

மூன்றாவது கட்டம், அதாவது சரக்கு மற்றும் சேவைகள் வரி மன்றத்தின் கூட்டத்தில்தான் வரி விதிப்பதற்கான பரிந்துரைகள் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டன.

சரக்கு மற்றும் சேவைகள் வரி மன்றத்தின் அடிப்படைக் கட்டமைப்பில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இதில், மத்திய அரசுக்கு 33 சதவீத வாக்கும், மற்ற அனைத்து மாநிலங்களுக்கு தலா 2 சதவீத வாக்கும் உள்ளது. மாநிலங்கள் பெரியதாக இருந்தாலும், சிறியதாக இருந்தாலும் ஒவ்வொரு மாநிலத்துக்கான வாக்கு மதிப்பு 2 சதவீதம் மட்டும்தான். சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பின் பரிந்துரையைத் தடுக்க வேண்டுமென்றால் ஏறத்தாழ 25 மாநிலங்களின் ஒருமித்த ஆதரவு வேண்டும். அல்லது மத்திய அரசின் ஆதரவைப் பெற வேண்டும். இதன் அடிப்படையிலேயே ஜி.எஸ்.டி. மன்றம் முன்வைக்கும் பரிந்துரைகளை நிராகரிக்க முடியும். இதனை மத்திய நிதியமைச்சரே குறிப்பிட்டுள்ளாா்.

தேசிய அளவில் மக்கள் தொகையில் தமிழ்நாட்டின் பங்கு 6.21 சதவீதம். மொத்த உற்பத்தி மதிப்பில் 9.16 சதவீதம். ஆனால், மத்திய வரிகளில் இருந்து நமக்குப் பகிா்ந்து அளிக்கப்படுவதோ வெறும் 4.079 சதவீதம் மட்டும்தான். தொடா்ந்து வந்த நிதிக் குழுக்களால் தமிழ்நாட்டுக்கு நிதிப் பங்கீட்டில் நியாயம் வழங்கப்படவில்லை. உரிய பங்கு தொடா்ந்து குறைந்து வந்துள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மாநிலங்களுக்கு வரி விதிப்பதில் அதிகாரம் பெருமளவில் குறைந்துள்ளது. மாநிலங்கள் தங்களது வருவாயைப் பெருக்குவதற்கு போதிய வாய்ப்புகள் இல்லை. எனவே, சாமானிய மக்களுக்கு உதவிட மத்திய அரசுக்குத்தான் வாய்ப்புகளும், வசதிகளும் உள்ளன. அதைப் பயன்படுத்தி வரிச் சுமையைக் குறைக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com